கோலாலம்பூர், ஜன 15 – உலுசிலாங்கூரில் நடந்த கூட்டத்தில் துணை கல்வியமைச்சர் கமலநாதனை தாக்கிய அம்னோ உறுப்பினருக்கு, கட்சி காரணம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
இது குறித்து அம்னோ பொதுச்செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் கூறுகையில், “துணை கல்வியமைச்சரை தாக்கிய உலுசிலாங்கூர் இளைஞர் பிரிவு துணை செயலாளர் முகமட் ரிஸுவான் சுஹைமிக்கு எதிராக கட்சி நடவடிக்கை எடுக்கும். இந்த சம்பவம் குறித்து கட்சி மேலிடம் வருந்துகிறது. இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது என்று நம்புகின்றோம்.” என்று தெரிவித்தார்.
மேலும், “சம்பந்தப்பட்ட நபரின் மீது நாங்கள் நடவடிக்கை எடுப்பதற்கு முன்னர், பிரச்சனைக்கான காரணம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். நிச்சயம் அவரது செயலுக்கு தக்க நடவடிக்கை எடுப்போம்” என்று அட்னான் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
“விவாதம், கூட்டம் ஆகியவற்றில் கருத்துக்கள் மாறுபாடு இருக்கலாம். ஆனால் எந்த காரணதிற்காகவும் வன்முறையை கையில் எடுப்பதை அம்னோ விரும்பாது” என்றும் அட்னான் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே, கமலநாதனை தாக்கிய அம்னோ உறுப்பினர் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம.இ.கா தேசிய தலைவர் பழனிவேல், ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் சிவராஜா, ம.இ.கா மகளிர் பிரிவுத் தலைவர் மோகனா ஆகியோர் நேற்று அறிக்கை விடுத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.