நியூயார்க், ஜன 11– அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகத்தில் துணை தூதராக பணிபுரிந்த தேவயானியின் வீட்டு பணிப்பெண் சங்கீதா ரிச்சர்ட்டுக்கு விசா வாங்க பொய்யான தகவல்களை கூறி மோசடி செய்ததாகவும், மிக குறைந்த அளவில் சம்பளம் கொடுத்ததாகவும் தேவயானி மீது புகார் கூறப்பட்டது. அதனால் அவர் கைது செய்யப்பட்டு அதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையே பல பிரச்சினைகள் எழுந்தன.
இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பணிப் பெண் சங்கீதா ரிச்சர்டு இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் சாதித்து வந்தார். அவ்வகையில் அவர் அமெரிக்காவில் அளித்த பேட்டியில்,தான் சித்ரவதை செய்யப்பட்டதாக தெரிவித்திருந்தார்.
சங்கீதா ரிச்சர்டு தனது குடும்பத்திற்கு பணம் தேவைப்பட்டதால் சில ஆண்டுகள் வீட்டு வேலைக்காக அமெரிக்கா வந்ததாகவும் ஆனால் இங்கு அவருக்கு இவ்வளவு மோசமான நிலை ஏற்படும் என்று சிறிதும் நினைத்து பார்க்கவில்லை என்று தனது பேட்டியில் அறிவித்திருந்தார்.
தேவயானி வீட்டில் தன்னை ஏராளமான வேலைகளை வாங்கி சித்ரவதை செய்தனர் என்றும் இதனால் தனக்கு சாப்பிடுவதற்கோ, தூங்குவதற்கோ மற்றும் தனது பணிகளை கவனிப்பதற்கோ போதிய நேரம் கிடைக்காமல் கடும் அவதிப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
மேலும், தேவயானியின் வீட்டில் தன்னை அவமரியாதையாக நடத்தினார்கள். அந்த காரணத்திற்குதான் தான் இந்தியாவுக்கு திரும்ப முயற்சி செய்ததாகவும் ஆனால் அதற்கு அவர்கள் அனுமதி அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
சங்கீதா ரிச்சர்டு அமெரிக்காவில் தன்னைப் போன்று பல்வேறு சிரமங்களுக்கு இடையில் வீட்டு வேலைக்காரர்களாக பணிப்புரிவர்களின் உரிமைகள் பாதுக்காக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
சங்கீதா ரிச்சர்ட்டின் இந்த அறிக்கையை சங்கீதா சார்பில் அமெரிக்காவின் ‘சேப் ஹாரிசன்’ என்ற அமைப்பு வெளியிட்டது. இந்த அமைப்புதான் சங்கீதா ரிச்சர்ட்டுக்காக வாதாடி வருகிறது.