Home வணிகம்/தொழில் நுட்பம் நாளை முதல் சீனாவில் புதிய ஐ-போன்கள் விற்பனை!

நாளை முதல் சீனாவில் புதிய ஐ-போன்கள் விற்பனை!

524
0
SHARE
Ad

apple-iphone-4-101ஜனவரி 16 – நாளை மலரப்போகும் வெள்ளிக்கிழமை ஜனவரி 17ஆம் நாள் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் வணிகப் பயணத்தில் மிக முக்கியமான கட்டமாகும். நாளை முதல் புதிய ரக ஐ-போன்கள் சீனாவில் விற்பனைக்கு வரப் போகின்றன.

#TamilSchoolmychoice

ஆனால், அவற்றை விற்கப் போவது சைனா மொபைல் என்ற சீன தொலைத் தொடர்பு நிறுவனம் என்பதுதான் முக்கியமான செய்தி. இது உலகின் மிகப்பெரிய செல்பேசி தொடர்பு நிறுவனம் என்பதோடு, சீனாவில் அதிவேகத்தில் வளர்ச்சி பெற்று வரும் நிறுவனமுமாகும்.

சீனாவில் நாளை நடைபெறப் போகும் அறிமுக நிகழ்வை முன்னிட்டு தற்போது சீனா வந்துள்ள ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல்முறை அதிகாரி டிம் குக் சிஎன்பிசி தொலைக்காட்சி நிறுவனத்திடம் வழங்கிய நேர்காணலில் “இது எங்களுக்கு ஒரு முக்கியமான நாள், ஒரு மிகப் பெரிய அறிவிப்பு. சைனா மொபைல் நிறுவனத்தின் மீதி மிகுந்த மதிப்பு வைத்திருக்கின்றோம். அவர்களின் நடவடிக்கையில் திருப்தி கொண்டிருக்கின்றோம். உலகின் மிகச் சிறந்த செல்பேசியான ஐ-போனை உலகின் மிகப்பெரிய, மிக துரிதமாக வளர்ந்து வரும் செல்பேசித் தொடர்பு நிறுவனத்தோடு இணைக்கும் முக்கிய வணிக நிகழ்வு இது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

டிசம்பர் மாதத்தில் முன் பதிவுகளை பெறத் தொடங்கிய சைனா மொபைல் ஒரு நாளைக்கு 60,000 ஐ-போன்கள் வீதம் விற்று வருகின்றது. முன் பதிவு தொடங்கிய டிசம்பர் 25ஆம் தேதி முதல் ஜனவரி 13ஆம் தேதிக்குள் சைனா மொபைல் இதுவரை 1.3 மில்லியன் (13 இலட்சம்) ஐ-போன்களை முன்பதிவு மூலம் சீனாவில் விற்பனை செய்திருக்கின்றது.

சைனா மொபைல் நிறுவனத்துடன் வணிக ரீதியாக இணைந்திருப்பதன் மூலம் சீனாவில் 3,000க்கும் மேற்பட்ட புதிய மையங்களில் ஐ-போன்கள் விற்பனை செய்யப்பட முடியும். இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் மூலம் ஐ-போன்கள் இதுவரை இல்லாத சீனாவின் சில நகர்களிலும் அவற்றை ஆப்பிள் நிறுவனம் விற்பனை செய்ய முடியும்.

எனவே, நாளை முதல் சீனாவில் தொடங்கும் ஐ-போன்கள் விற்பனையில் ஆப்பிள் நிறுவனம் மீண்டும் ஒரு சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.