ஜனவரி 24 – குறுந்தகவல் பரிமாற்ற செல்பேசி செயலியான வாட்ஸ் எப் (Whatsapp), இன்றைக்கு 430 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களை உலகம் எங்கும் கொண்டு நாளுக்கு நாள் அசுர வளர்ச்சி கண்டு வருகின்றது.
இன்றைக்கு இலட்சக்கணக்கில் பெருகிவிட்ட செல்பேசி செயலிகள் தொழில் நுட்பத்தில், ஆரம்ப காலங்களில் நுழைந்து, தனது தனித்துவமிக்க தொழில்நுட்பம் மற்றும் இலக்குகளால் தனக்கென ஓர் இடத்தை வாட்ஸ்எப் பிடித்துக் கொண்டுள்ளது.
இன்றைய நிலையில் லைன் (Line), வி சாட் (WeChat), கக்காவ் டாக் (KakaoTalk), ஸ்னாப்சாட் (Snapchat) போன்ற மற்ற தகவல் பரிமாற்ற செயலிகள் சந்தைக்குள் நுழைந்திருந்தாலும் வாட்ஸ்எப் செயலியின் ஆதிக்கமும், ஈர்ப்பும் இன்னும் குறையவில்லை.
போட்டிகள் இருந்தாலும், தனது தலையாய வணிக குறிக்கோள்களிலிருந்து வழுவாது வாட்ஸ்எப் செயல்படுகின்றது. உதாரணமாக, தனது பக்கங்களில் விளம்பரம் போடுவதில்லை, விளையாட்டுகளை இணைப்பதில்லை போன்றவற்றை தனது கொள்கையாகக் கொண்டிருக்கும் அதே வேளையில் பயனர்கள் தங்களின் சேவைக்காக ஒரு குறைந்த கட்டணத்தை செலுத்த வேண்டும் என்பதையும் தனது அடிப்படை வணிகத் திட்டமாக இந்த செயலி வைத்திருக்கின்றது.
முதலில் இலவசம் – பின்பு கட்டணம்….
முதலில் இலவசமாக தரப்படும் இந்த செயலி ஓர் ஆண்டு பயனீட்டுக்குப் பின்னர் 0.99 அமெரிக்க காசுகள் விலையில் தரப்படுகின்றது.
கடந்த சில மாதங்களுக்குள்ளாக 30 மில்லியன் பயனர்களை வாட்ஸ்எப் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். கடந்த டிசம்பரில்தான் தனது பயனர்களின் எண்ணிக்கை 400 மில்லியனை நெருங்குகின்றது என்று அறிவித்த வாட்ஸ்எப் தற்போது தனது பயனர்களின் எண்ணிக்கை 430 மில்லியனை தாண்டிவிட்டது என அறிவித்துள்ளது.
ஒவ்வொரு நாளும் வாட்ஸ்எப் மூலம் 50 பில்லியன் குறுந்தகவல்கள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இது பொதுவாக செல்பேசி நிறுவனங்களின் மூலம் பரிமாற்றம் செய்யப்படும் குறுந்தகவல்களை விட அதிகமானதாகும்.
ஆனால், வாட்ஸ் எப் நிறுவனம் இலாபகரமாக செயல்படுகிறதா என்பதை இதுவரை அது அறிவிக்கவில்லை. “நாங்கள் வருமானத்தைப் பெறுகின்றோம், ஆனால் இலாபம் மட்டுமே எங்களின் குறிக்கோள் அல்ல. வாட்ஸ்எப் சிறந்த முறையில் செயலாற்ற வேண்டும், மக்களுக்குப் பயனளிக்க வேண்டும் என்பதுதான் எங்களின் குறிக்கோள்” என அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி அண்மையில் தெரிவித்திருந்தார்.
500 மில்லியன் பயனர்களைப் பெற வேண்டும் என்ற இலக்குடன் வாட்ஸ்எப் செயல்பட்டு வந்தாலும், அந்த நிறுவனம் இன்னும் சிறிய அளவிலான, கச்சிதமான நிர்வாக அமைப்பையே கொண்டிருக்கின்றது. அதன் மொத்த ஊழியர்கள் 50 பேர்தான். அவர்களில் 25 பேர் பொறியியல் வல்லுநர்கள். எஞ்சியவர்கள் பன்மொழி வாடிக்கையாளர்களைக் கையாளுபவர்கள்.
தனது செயலி பக்கங்களில் விளம்பரம் செய்வது நியாயமல்ல என்ற தனது வணிகக் குறிக்கோளுடன் தெளிவாகச் செயல்படும் வாட்ஸ்எப் நிர்வாகம், மக்கள் தங்களுக்குக் கட்டணம் செலுத்துவதால் அவர்களுக்கும் தங்களுக்கும் ஒரு நெருக்கமான, நேரடியான வணிகத் தொடர்பு உருவாகின்றது என்பதை நம்புகின்றது.
கூடிய விரைவில் 5 பில்லியன் திறன்பேசிக் கருவிகள் உலகில் உலா வரும் என சந்தை எதிர்பார்ப்புகள் கணித்துள்ள வேளையில், அந்த ஒவ்வொரு திறன்பேசியிலும் வாட்ஸ்எப் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பதையே தனது அடுத்த கட்ட வணிக இலக்காகக் கொண்டு அதன் நிர்வாகம் மும்முரமாக செயல்பட்டு வருகின்றது.
-இரா.முத்தரசன்