சிலாங்கூர், ஜன 28 – காஜாங் சட்டமன்ற உறுப்பினர் லீ சென்(படம்) நேற்று திடீர் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து அங்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில் எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் போட்டியிடுவார் என்று கூறப்படுகின்றது.
சிலாங்கூர் நடப்பு மந்திரி பெசார் ஆன டான்ஸ்ரீ காலிட் இப்ராகிமிற்கும், அஸ்மின் அலிக்கும் இடையே மோதல் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், காலிட் இப்ராகிம் பதவியிலிருந்து நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக அன்வார் பதவி ஏற்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அன்வார் போட்டியிடுவதற்கு ஏதுவாக லீ சென் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் என்றும் பரவலான கருத்து நிலவுகின்றது.
இதனிடையே தனது பதவியை காலிட் இப்ராகிம் ராஜினாமா செய்துவிட்டார் என்று கூறப்படும் செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று அவர் பத்திரிக்கை செயலாளர் அரிஃபாசா அஸிஸ் அறிவித்துள்ளார்.
கடந்தவாரம் பதவி விலகுவது தொடர்பாக காலிட் இப்ராகிமும், அன்வாரும் விவாதித்ததாகவும் கூறப்படுகின்றது.
ஆனால் காலிட் சார்பில் அதற்கும் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிலாங்கூரில் நிலவும் பிரச்சனைகள் தொடர்பாக ஒவ்வொரு வாரமும் தாங்கள் கலந்து பேசுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.