சென்னை, ஜன 29- மாயாண்டி குடும்பத்தினர், முத்துக்கு முத்தாக போன்ற வெற்றி படங்களை இயக்கிய இராசுமதுரவன் அண்மையில் புற்றுநோயால் காலமானதை தொடர்ந்து அவரது குடும்பம் கடன் தொல்லையில் சிக்கி தவித்து வருவதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றது.
இது குறித்து இயக்குநர் மற்றும் நடிகருமான சேரன் தனது பேஸ்புக் வலை பக்கத்தில் உருக்கமான செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார்.
“ திடீர் மரணம் ஒரு குடும்பத்தை எவ்வளவு நிலை குலைய வைக்கும் என்பதை இன்று என் கண்முன்னே பார்த்தேன். எதிர்கால சிந்தனை இல்லாத வாழ்க்கை அபாயகரமானது. இயக்குனர் ராசுமதுரவன் திடீரென இறந்துவிட்டார். இப்போது அவருடைய குடும்பத்தின் மீது அவர் திரைப்படம் எடுக்க வாங்கிய கடன் அசுரனை போல நின்று பயமுறுத்துகிறது. எந்த விதமான உத்திரவாதம் இல்லாத வாழ்க்கையே சினிமா வாழ்க்கை.
எந்த தொழில் செய்தாலும் இவ்வளவு முதலீடு செய்தால் இவ்வளவு மிஞ்சும் என்ற கணக்கு உண்டு. சினிமாவில் மட்டும் அது கனிக்க முடிவதே இல்லை. ஒரு சில நடிகர் இயக்குனர் தயாரிப்பாளர் தவிர பெரும்பாலோனோர் என்ன கிடைக்கும் எப்படி வாங்கிய கடன் அடையும் என்று தெரியாமலேயே திரைப்படம் எடுக்க வேண்டிய நிலை. (நான் உள்பட). ஆனால் வெளியில் இருந்து பார்க்கும் நிறைய பேருக்கு சினிமா கொட்டிக் கொடுக்கிறது என்ற எண்ணத்திலேதான் சினிமாக்காரர்கள் என்றால் கிண்டலும் கேலியும் செய்கிறார்கள்.
படம் எடுத்தவன் நிலை தெரிந்தால் எந்த மனிதனும் படத்தை திருட்டுத்தனமாக இணையத்தளத்திலும், விசிடி, டிவிடி இவைகளில் வெளியிடவோ பார்க்கவோ மாட்டார்கள். வெளியாகி ஒரு வாரம் திரைப்படம் ஓடினால் மட்டுமே போட்ட காசு திரும்ப வரும், தொலைக்காட்சி உரிமை நல்ல விலைக்கு போகும் என்ற நிலையில்தான் எல்லா படமும் வெளியாகிறது. இதில் 90% நஷ்டமே வருகிறது. முதல் நாளே எதோ ஒரு வழியில் திருட்டுத்தனமாக படம் போடும் கூட்டம் அதிகமாக இருப்பதே இதற்கு காரணம்.
அதே நேரம் விஞ்ஞான வளர்ச்சியை தடுக்கவும் முடியாது. என்ன செய்யலாம் ஏமாளியாகவே நாங்கள் செத்து மடிய வேண்டியது தானா? எங்கள் குழந்தைகளும் மனைவியும் கேட்பாரற்ற அனாதைகளாக கிடக்கட்டுமா?” என்று நடிகர் சேரன் தனது பேஸ்புக்கில் குறிப்பிட்டுள்ளார்.