கோலாலம்பூர், ஜன 29 – அடையாளம் தெரியாத சிலர் இன்று பாராங்கத்தியைக் கொண்டும், இரும்புக் கம்பியைக் கொண்டும் தமிழ் மலர் நாளிதழின் அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் அந்தப் பத்திரிக்கையின் ஊழியர் ஒருவரும் காயமடைந்தார்.
இந்த தாக்குதல் நடத்தியவர்களின் உள்நோக்கம் என்னவென்று தெரியவில்லை. இருப்பினும் தாக்குதல் நடத்தியவர்கள் தாங்கள் ஒரு பிரபல ஆன்மீகக் குருவின் தொண்டர்கள் எனக் கூறிக் கொண்டார்கள் என காயமடைந்த ஊழியரான எம்.ரவீந்திரன் கூறினார்.
இன்று காலை 11.30 மணியளவில் தலைக் கவசங்கள் அணிந்து கொண்டிருந்த, இந்தியர்கள் போன்று தோற்றமளித்த நால்வர், ஜாலான் ஈப்போவிலுள்ள தமிழ் மலர் நாளிதழ் அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களில் ஒருவன் தரைமாடியில் காத்திருக்க மற்ற மூவரும் அலுவலகம் அமைந்திருக்கும் முதல் மாடிக்குச் சென்று அலுவலகத்தின் சாதனங்களையும் நாற்காலி மேசைகளையும் அடித்து உடைத்தனர்.
அந்த நேரத்தில் தானும் மேலும் இரண்டு ஊழியர்களும் மட்டும் அலுவலகத்தில் இருந்ததாக எம்.ரவீந்திரன் கூறினார். அந்த தாக்குதலால் தாங்கள் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்தார். தங்கள் வசம் இருந்த பாராங் கத்தி மற்றும் இரும்புக் கம்பியைக் கொண்டு அலுவலகத்தில் இருந்த கணினிகளையும், கண்ணாடித் தடுப்புகளையும் வந்தவர்கள் உடைத்து நொறுக்கியதாகவும் ரவீந்திரன் கூறினார்.
அவர்களில் ஒருவன் ‘உங்களின் நிர்வாக எஸ்.எம்.பெரியசாமி எங்கே?’ என்று வினவினான் என்றும் பின்னர் அவர்கள் அலுவலக கணக்காய்வாளரின் அறைக்குள் நுழைந்து அவரது கைத் தொலைபேசி மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதாகவும் அதே சமயத்தில் அலுவலக மேசையில் இருந்த மற்றொரு கைத் தொலைபேசியையும் எடுத்துக் கொண்டதாகவும், தங்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும் ரவீந்திரன் குறிப்பிட்டார்.
இந்த தாக்குதல் குறித்து பேசிய தமிழ் மலரின் நிர்வாகி எஸ்.எம்.பெரியசாமி, இது ஒட்டு மொத்த தகவல் ஊடகங்களின் மீது நடத்தப்பட்ட தாக்குதலாகத் தான் கருதுவதாகக் கூறினார்.
“நாங்கள் ஒரு நடுநிலையான பத்திரிக்கை. மக்கள் நலனுக்காக, சமுதாய நலனுக்காக நாங்கள் செய்திகள் வெளியிடுகின்றோம். அவ்வளவுதான். அதற்காக இந்த முறையில் எங்கள் மீது தாக்குதல் நடத்துவது தவறு” என்றும் பெரியசாமி கருத்துரைத்தார்.
தமிழ் மலர் மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டும் இதே போன்றதொரு தாக்குதல் நடத்தப்பட்டு அது குறித்து காவல் துறையில் புகாரும் செய்யப்பட்டிருக்கின்றது.
“தாங்கள் யாரையும் இந்த தாக்குதலுக்கான காரணகர்த்தாவாகக் குறிப்பிட விரும்பவில்லை. காவல் துறையில் முறையான புகாரைச் சமர்ப்பிப்போம்” என்றும் பெரியசாமி தெரிவித்தார்.
தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஆறு தமிழ் தினசரிகளில் தமிழ் மலர், ஆகக் கடைசியாக கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் பதிப்பிக்கப்பட்டு வெளிவந்து கொண்டிருக்கும் பத்திரிக்கையாகும்.
-ஃபிரி மலேசியா டுடே