ஜனவரி 29 – அம்னோவில் பதவிப் போராட்டம் தொடங்கி விட்டது என்றும் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீரின் ஆதரவாளர்கள் நஜிப்பின் தலைமைத்துவத்தைக் கவிழ்ப்பதற்குத் தங்களின் முயற்சிகளை முடுக்கி விட்டுள்ளனர் என்றும் பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் ரஃபிசி ரம்லி கூறியுள்ளார்.
ரஃபிசி ரம்லி சிலாங்கூர் மாநிலத்தின் பாண்டான் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
காஜாங் சட்டமன்றத் தொகுதியில் பிகேஆர் கட்சி உருவாக்கியுள்ள இடைத் தேர்தல் தேவையற்ற ஒன்று என எழுந்துள்ள கருத்துக்கள் தொடர்பில் மலேசியாகினி செய்தி இணையத் தளத்திற்கு எழுதியுள்ள கட்டுரையில் ரஃபிசி இவ்வாறு கூறியுள்ளார்.
“பிரதமர் நஜிப்பைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகள் வெற்றியடைந்தால், அம்னோ, டாக்டர் மகாதீரின் தீவிரப் போக்குடைய ஆதரவாளர்களின் வசம் போகும்.தற்போது பலவீனமான நிலையில் உள்ள நஜிப் பதவியில் இருந்து அகற்றப்பட்டால், அதன் பின்னர், அம்னோவைக் கைப்பற்றும் தலைமைத்துவம் எப்படியாவது சிலாங்கூர் மாநிலத்தின் பக்காத்தான் அரசாங்கத்தைக் கவிழ்ப்பதற்கான முயற்சிகளை எடுக்கும்” என்றும் ரஃபிசி தனது கட்டுரையில் எழுதியுள்ளார்.
அத்தகைய ஒரு நிலைமையை முன்கூட்டியே தவிர்ப்பதற்காகத்தான் சிலாங்கூர் மாநிலத்தில் பக்காத்தானின் தலைமைத்துவத்தைப் பலப்படுத்துவதற்காக அன்வாரையே நேரடியாக களத்தில் இறக்குவதற்கு, பக்காத்தான் தலைவர்கள் முடிவெடித்திருப்பதாகவும், பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் என்ற முறையில் தற்போது நடைபெற்று வரும் திடீர் அரசியல் மாற்றங்களின் பின்னணியில் தானும் ஒரு காரணம் என்றும் அந்தக் கட்டுரையில் ரஃபிசி ஒப்புக் கொண்டுள்ளார்.
புத்ரா ஜெயாவைக் கைப்பற்றும் பயணத்தில் மற்றொரு முயற்சி
மேலோட்டமாகப் பார்க்கும்போது பிகேஆர் தற்போது மேற்கொண்டுள்ள அரசியல் நடவடிக்கை சரியல்ல என்ற கருத்து விவாதங்கள் எழுந்தாலும் எதிர்காலத்தில் புத்ரா ஜெயாவை பக்காத்தான் கைப்பற்றி மத்திய அரசாங்கத்தை அமைக்கும் நிலைமை ஏற்பட்டால் அதற்கான விதையை விதைத்தது இன்றைய அரசியல் நடப்புகள்தான் என்பதை நாளைய சரித்திரம் கூறும் என்றும் ரஃபிசி குறிப்பிட்டுள்ளார்.
வேண்டுமென்றே தாங்கள் காஜாங் சட்டமன்றத்திற்கான இடைத் தேர்தலை உருவாக்கவில்லை என்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தங்களை அப்படி ஒரு முடிவெடுக்கும்படியான நெருக்குதலுக்கு உள்ளாக்கியிருப்பதாகவும் கூறியுள்ள ரஃபிசி, இதற்காக தாங்கள் மக்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
“பக்காத்தான் ஆட்சியில் ஒரு முன்னுதாரண மாநிலம் எப்படியெல்லாம் திகழும் என்பதைக் காட்ட சிலாங்கூரை நாங்கள் உருவாக்கிக் காட்ட விழைகின்றோம். அடுத்த மத்திய அரசாங்கத்தை அமைக்கும் எங்களின் முயற்சிக்கு எங்களுக்குக் கிடைத்திருக்கும் முதல் களம்தான் சிலாங்கூர் மாநிலம். அதற்கான எங்களின் ஒரு முயற்சிதான் காஜாங்கில் இன்று உருவாகியுள்ள இடைத் தேர்தல். எதிர்காலம், எங்களின் இன்றைய அரசியல் நடவடிக்கையையும், வியூகத்தையும் நிச்சயம் பாராட்டும்” என்றும் ரஃபிசி மலேசியாகினிக்கு தான் எழுதியுள்ள அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
அம்னோவின் கவிழ்ப்பு முயற்சிகளை முறியடிப்பதற்காக…
“சிலாங்கூரில் பக்காத்தான் ஆட்சிக்கு எதிராகவும் முடிந்தால் அதனைக் கவிழ்ப்பதற்கும் அம்னோ முயற்சிகள் மேற்கொள்ளும் பட்சத்தில் அதனை முறியடிப்பதற்கான மாற்று வழிகளை இப்போதே நாங்கள் தயாராக வைத்திருக்க வேண்டும். அத்தகைய ஓர் மாற்றுவழிதான் அன்வார் சிலாங்கூர் மாநிலத்தில் சட்டமன்ற உறுப்பினராவது. இதன்மூலம் அவர் மந்திரி பெசார் ஆவது முக்கியமல்ல. ஆனால், அத்தகைய ஓர் வாய்ப்பை நாங்கள் முன்கூட்டியே உருவாக்கி வைத்திருப்பதுதான் நாங்கள் வகுத்திருக்கும் எங்களின் இப்போதைய வியூகம். கெடாவில் நிகழ்ந்ததைப் போன்ற அரசியல் மாற்றத்தை அனுபவமாகக் கொண்டு நாங்கள் மேற்கொண்டுள்ள அரசியல் வியூகம் இது” என்றும் பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநரான ரஃபிசி ரம்லி தனது கட்டுரையில் தெளிவாக எழுதியுள்ளார்.