கோலாலம்பூர் – கடந்த செவ்வாய்க்கிழமை செப்டம்பர் 5-ஆம் தேதி தமிழ் மலர் பத்திரிக்கையின் அலுவலகத்தில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பில், மஇகா தனிப்பட்ட விசாரணை எதனையும் மேற்கொள்ளாது என்றும் காவல் துறையின் விசாரணை முடிவுக்காகக் காத்திருப்போம் என்றும் மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் கூறினார்.
இன்று வெள்ளிக்கிழமை தேசிய முன்னணி தலைவர்களுக்கான கூட்டத்திற்குப் பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது “அந்த சம்பவம் குறித்து முரண்பட்ட கருத்துகள் இரு தரப்பாலும் தெரிவிக்கப்படுவதால், காவல் துறைதான் அந்த சம்பவம் குறித்து விசாரித்து சரியான நிலவரத்தைத் தெரிவிக்கக் கூடிய பொருத்தமான தரப்பாகும். எனவே, காவல் துறையின் விசாரணை முடியும்வரை காத்திருப்போம்” என்றும் அவர் மேலும் கூறினார்.
விசாரணை முடிவில் உண்மை நிலவரம் தெரியக் கூடும் என்றும் டாக்டர் சுப்ரா நம்பிக்கை தெரிவித்தார். காவல் துறையின் விசாரணை முடிவுகளுக்கேற்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மஇகா கூட்டரசுப் பிரதேச மாநில கட்டட வாடகை குறித்தும், மஇகா கூட்டரசுப் பிரதேச மாநிலத் தலைவரும் துணையமைச்சருமான டத்தோ எம்.சரவணன் குறித்தும் செய்திகள் வெளியிட்டதைத் தொடர்ந்து, அந்த செய்திகளில் உண்மையில்லை என்று கூறி, தமிழ் மலர் பத்திரிக்கை அலுவலகத்திற்கு மஇகா இளைஞர் பகுதியினர் சிலர் சென்றதைத் தொடர்ந்து அங்கு வாக்குவாதங்களும், கைகலப்புகளும் மூண்டதாக செய்திகள் தெரிவித்தன.
அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட மஇகாவினரை சமாதானப்படுத்தவே சென்றதாக சரவணன் தெரிவித்திருந்தார்.