ஜனவரி 30 – ராஜயோக சக்தி ஆழ்நிலை தியான இயக்கத்தினர், நேற்று தமிழ் மலர் பத்திரிக்கை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கும் தங்கள் இயக்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அத்தகைய சம்பவம் நடந்திருக்கக் கூடாது என்றும் அது குறித்து தாங்களும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மலேசியாகினி இணைய செய்தித் தளத்திற்கு இணைய அஞ்சல் மூலம் வழங்கிய பதிலில் அந்த இயக்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
“தமிழ் மலர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நாங்கள் எந்த விதத்திலும் சம்பந்தப்படவில்லை. நாங்கள் சட்டபூர்வமாக நடப்பவர்கள். வன்முறைகளை நாங்கள் ஆதரிப்பதில்லை. நடுநிலையையும், நியாயத்தையும் நம்புபவர்கள் நாங்கள். அந்த சம்பவத்துக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை. அந்த சம்பவத்துடன் எங்களை இணைத்து பேசுவது மலிவான விளம்பரமாகும்” என்றும் இராஜயோகா இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மலர் பத்திரிக்கை அலுவலகத் தாக்குதல் குறித்து அந்த பத்திரிக்கையின் நிர்வாகி எஸ்.எம்.பெரியசாமி காவல் துறையில் புகார் செய்துள்ளார்.
டத்தோஸ்ரீ குருஜி தோற்றுவித்த அமைப்பு
வி.பாலகிருஷ்ணன் என்பவரால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்பு இராஜயோக சக்தி ஆழ்நிலை தியான அமைப்பாகும். அவரைப் பின்பற்றுபவர்கள் அவரை டத்தோஸ்ரீ குருஜி என அன்புடன் அழைக்கின்றனர்.
இதற்கிடையில் இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்துரைத்த தமிழ் மலர் பத்திரிக்கையின் ஆசிரியர் ராஜேஸ்வரி கணேசன், குருஜியைப் பற்றி எழுதுவதை நிறுத்துங்கள் என பல முறை தொலைபேசி மிரட்டல்கள் தங்களுக்கு வந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
“நாங்கள் எழுதுவதை நிறுத்தப் போவதில்லை. நாங்கள் எழுதுவது சரியில்லை என்றால் குருஜி எங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கலாம். ஆனால் இதுவரை அவ்வாறு அவர்கள் செய்யவில்லை” என்றும் ராஜேஸ்வரி கூறியுள்ளார்.
தமிழ் மலர் பத்திரிக்கையின் எழுத்துகள் தங்களின் மதிப்பையும் மரியாதையையும் குலைக்கும் நோக்கத்தோடு எழுதப்படுவதாகவும் இது குறித்து தங்களின் வழக்கறிஞர்கள் தேவையான ஆவணங்களைத் தயாரித்து வருவதாகவும் இராஜயோகா சக்தி ஆழ்நிலை தியான அமைப்பினர் கூறியுள்ளனர்.
இந்த தகவல்களை மலேசியாகினி இணைய செய்தித் தளம் வெளியிட்டுள்ளது.