ஜனவரி 30 – மற்ற செல்பேசி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து ஏற்பட்டுள்ள போட்டித் தன்மையை எதிர்கொள்வதற்காக, ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு, அகன்ற திரை கொண்ட இரண்டு புதிய ரக ஐ-போன்களை அறிமுகம் செய்யக் கூடும் என நியூயார்க்கிலிருந்து வெளியாகும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் ஆரூடம் வெளியிட்டுள்ளது.
கடந்த சில வாரங்களாக தொழில் நுட்ப இணையப் பக்கங்களில் உலா வரும் ஆரூடங்களை ஆதாரமாக வைத்து 2014ஆம் ஆண்டின் நடுவில் இந்த இரண்டு ரக ஐ-போன்கள் வெளியிடப்படலாம் என அந்தப் பத்திரிக்கையின் செய்தி கூறுகின்றது.
ஐ-போன்கள் தற்போது 4 அங்குல குறுக்களவு திரைகளைக் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. புதிய ரகம் 4.5 அங்குல குறுக்களவு திரையோடு தயாரிக்கப்படலாம் என்றும் மற்றொரு ரகம் ஐந்து அங்குலத்திற்கும் கூடுதலான குறுக்களவைக் கொண்ட திரையோடு வெளியிடப்படலாம் என்றும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் மேலும் ஆரூடம் கூறியுள்ளது.
இரண்டு ரகங்களும் உலோகத்திலான கவசத்தைக் கொண்டிருக்கலாம். ஆனால், சாம்சுங் எல்ஜி போன்ற போட்டி கொரிய நிறுவனங்கள் உருவாக்கும் வளைந்த (curved) திரைகளை ஐ-போன்கள் கொண்டிருக்காது என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அகன்ற திரை கொண்ட செல்பேசிகள் ‘பேப்லட்’ (phablet) என்ற பெயரில் தற்போது பிரபலமாகி வருவதோடு, அதிக அளவிலும் விற்பனையாகின்றன. இவை செல்பேசிகளின் செயல்பாடுகளோடு, தட்டைக் கணினிகளின் (டேப்லட்) செயல்பாடுகளையும் கொண்டிருக்கின்றன.
உதாரணமாக, சாம்சுங் தயாரிப்பாக ‘கேலக்சி நோட்’ வரிசையில் 5.7 அங்குல குறுக்களவு கொண்ட ‘பேப்லட்’ வகை கையடக்கக் கருவிகள் மிக அதிக அளவில் விற்பனையாகி வெற்றி பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு மட்டும் 20 மில்லியன் அகன்ற திரை கொண்ட பேப்லட் வகை செல்பேசிகள் உலக அளவில் ஏற்றுமதி செய்யப்பட்டன.
2018ஆம் ஆண்டிற்குள் இத்தகைய பேப்லட் வகை கையடக்கக் கருவிகளின் விற்பனை 120 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.