டிசம்பர் 25 – உலகெங்கிலும் இலட்சக்கணக்கான ஐ-போன்களை விற்பனை செய்வதில் ஆப்பிள் நிறுவனம் வெற்றி கண்டாலும் சீன தேசத்தில் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு ஐ-போன் திறன் பேசிகளை விற்பனை செய்வதில் அந்த நிறுவனம் சமீப காலமாக சரிவையே சந்தித்து வந்தது.
ஆனால் ஒரு காலத்தில் சீனாவில் ஐ-போன் திறன் பேசிகள் மிகப் பிரபலமாக விற்பனையாகின என்பது குறிப்பிடத்தக்கது.
கொரியாவின் சாம்சுங் நிறுவனமும், சீனாவின் செல்பேசி உற்பத்தியாளர்களும் மலிவு விலையில் செல்பேசிகளை உற்பத்தி செய்து சீன சந்தையை நிறைக்க, அதன் காரணமாக ஐ-போன்களின் விற்பனை சீனாவில் பெருமளவில் பாதிக்கப்பட்டது.
இந்த நிலையை சீரமைக்கும் வகையில் சீன நிறுவனமும் உலகின் மிகப் பெரிய செல்பேசி சந்தாதாரர்களைக் கொண்ட நிறுவனமுமான சைனா மொபைல் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளதாக ஆப்பிள் அறிவித்துள்ளது.
சைனா மொபைல், சீன நாட்டு அரசு நிறுவனம் என்பதுடன் சுமார் 750 மில்லியன் செல்பேசி சந்தாதாரர்களைக் கொண்டுள்ளது.
அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட 5சி மற்றும் 5 எஸ் ரக ஐ-போன் திறன் பேசிகள் சீனாவிலுள்ள ஆப்பிள் நிறுவன விற்பனை மையங்களிலும், சைனா மொபைல் விற்பனை மையங்களிலும் எதிர்வரும் ஜனவரி 17 முதல் விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவுகள் இன்று டிசம்பர் 25 முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனத்திற்கும், சைனா மொபைல் நிறுவனத்திற்கும் இடையிலான கூட்டு ஒப்பந்தத்தின் வணிக அம்சங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.