ஜனவரி 8 – நமது செல்பேசிகளைத் தொலைத்துவிட்டு தேடுவது என்பது அனைவருக்கும் அவ்வப்போது ஏற்படுகின்ற ஒரு தொல்லைதான்.
நீங்கள் ஐ-போன் உபயோகிப்பவரா? அதனை அடிக்கடி தொலைத்து விட்டு மண்டை குடையத் தேடி அலைபவரா?
அப்படியென்றால் இந்த கட்டுரை உங்களுக்கு உதவக் கூடும்!
ஐ-போன் உபயோகிப்பவர்கள் அதனைத் தொலைத்துவிட்டால் அதைக் கண்டுபிடிக்க, உதவும் வகையில் நான்கு வழிகளை http://www.tuaw.com/ என்ற இணையத் தளம் அடையாளம் கண்டு வெளியிட்டுள்ளது. மீண்டும் இவ்வாறு ஐ-போன்கள் காணாமல் போவதற்கான பாதுகாப்பு வழிமுறைகளையும் தெரிவித்துள்ளது.
Find My iPhone – என்ற செல்பேசி செயலியை (Apps) ஐ-போனில் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளலாம். உங்களின் ஐ-போன் வைக்கப்பட்டிருந்த பாதையை இது கண்டுபிடித்துக் கொடுக்கும். தற்போது ஐ-போன் எங்கிருக்கின்றது என்பதையும் ஜிபிஎஸ் என்ற துணைக்கோள வரைபடத்தில் காட்டி விடும்.
அப்படியே யாராவது, அந்த ஐ-போனைக் கண்டெடுத்தால் இது காணாமல் போன ஐ-போன் என்ற தகவலையும் தெரிவிக்கும்.
GPS Phone Tracker – இந்த செயலியைப் பொருத்திக் கொண்டால் இரண்டு நிமிடங்களுக்கு ஒருமுறை உங்களின் ஐ-போன் எங்கிருக்கின்றது என்பதை எடுத்துக்காட்டும் வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம். காணாமல் போன ஐ-போனின் இருப்பிடத்தைக் காட்டுவதோடு, அது எப்படி அங்கே போனது என்பதையும் இந்த செயலி உங்களுக்குக் காட்டிக் கொடுக்கும்.
உங்கள் நண்பர்களும், நம்பிக்கையானவர்களும் காணாமல் போன ஐ-போன் இருக்கும் இடத்தைப் பார்க்கும் வண்ணமும் இந்த செயலியில் வசதியை ஏற்படுத்திக் கொள்ளலாம்.
Where’s My Cellphone – இது மற்றொரு வகையான இணையத் தள சேவையாகும். இந்த இணையத்தளம் காணாமல் போன உங்கள் ஐ-போனுக்கு உடனடியாக அழைக்கும். காணாமல் போன ஐ-போனுக்கு அழைக்கும் வண்ணம் இது அமைக்கப்பட்டிருக்கின்றது.
இந்த இணையத்தள சேவை இதுவரை 14 மில்லியன் தடவைகளுக்கு மேல் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
BiKN – இது நமது சாவிகள், செல்பேசி, பணப்பை போன்றவற்றை மின்இலக்கம் மூலமாக பின் தொடரும் (tag) சேவையாகும். இதனை ஒரு பாதுகாப்பு கவச உறைபோல பயன்படுத்தலாம். இதனைப் பயன்படுத்தும் காலத்தில் காணாமல் போனால், இது எச்சரிக்கை ஒலியை எழுப்பி சம்பந்தப்பட்ட பொருள் எங்கே இருக்கின்றது என்பதை கண்டுபிடித்துக் காட்டும்.
உங்களுக்கு நீங்களே பரிட்சை செய்து பாருங்கள்! எந்த வழி உங்களுக்குப் பொருந்துகின்றது என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.