Home கலை உலகம் சினிமா வாய்ப்பு குறைந்ததால் நடிகர் உதய் கிரண் தற்கொலை: பரபரப்பு தகவல்கள்

சினிமா வாய்ப்பு குறைந்ததால் நடிகர் உதய் கிரண் தற்கொலை: பரபரப்பு தகவல்கள்

688
0
SHARE
Ad

Uday Kiran001

சென்னை, ஜன 8- தெலுங்கு திரையுலகில் கதாநாயகனாக திகழ்ந்த இளம் நடிகர் உதய் கிரண் நேற்று முன்தினம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஐதராபாத் ஸ்ரீநகர் காலனியில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் இந்த துயர முடிவை தேடிக்கொண்டார்.

#TamilSchoolmychoice

சித்திரம் என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான உதய்கிரண் நுவ்வுநேனு (நீயும், நானும்) உள்பட பல வெற்றி படங்களை கொடுத்து சாதனை படைத்தார். மேலும் பொய், வம்பு சண்டை, பெண் சிங்கம் போன்ற தமிழ் திரை படங்களில் அவர் நடித்தார்.

காதல் இளவரசனாக வலம் வந்த உதய்கிரண் தற்கொலை செய்து கொண்டது தெலுங்கு திரையுலகையும், அவரது ரசிகர்களையும் அதிர்ச்சி அடையச் செய்து உள்ளது.

பட வாய்ப்புகள் குறைந்ததால் ஏற்பட்ட விரக்தியில் அவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. உதய் கிரண் உச்சத்தில் இருந்தபோது 2003–ம் ஆண்டு அவருக்கும், சிரஞ்சீவி 2–வது மகள் சுஷ்மிதாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஆனால் ஏதோ காரணத்தால் அந்த திருமணம் ரத்து ஆனது.

அது முதலே உதய் கிரண் வாழ்க்கையில் தோல்விகளும், சோகமும் தொடர ஆரம்பித்தது. அவர் நடித்த படங்கள் தோல்வி அடைந்து வந்தது. தமிழ் படங்கள் கூட அவருக்கு கை கொடுக்கவில்லை. இதனால் மன விரக்தியில் இருந்தார்.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உதய்கிரண் தாய் நிர்மலா மரணம் அடைந்தார். தாய் இறந்த 1 வருடத்தில் அவரது தந்தை மூர்த்தி 2–வது திருமணம் செய்து கொண்டார். இது உதய் கிரணுக்கு பிடிக்கவில்லை.

அதோடுதான் சம்பாதித்த பணத்தை தந்தை தவறாக பயன்படுத்துகிறார் என்ற எண்ணம் தலைதூக்கியது. இதனால் தந்தையிடம் இருந்து பிரிந்து தனிமை வாழ்க்கை நடத்தினார்.

படவாய்ப்புகளும் வராததால் மிகவும் மனமுடைந்து காணப்பட்டார். இந்த சோகத்தில் இருந்து அவரை மீட்க திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

உறவினர்கள் ஏற்பாட்டின்படி 2012–ம் ஆண்டு தனது பழைய தோழி விசிதாவை உதய் கிரண் திருமணம் செய்து கொண்டார். திருமண வாழ்க்கைக்கு பிறகும் அவருக்கு படவாய்ப்புகள் கை கொடுக்கவில்லை. தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்று தனது மனைவி மற்றும் நண்பர்களிடம் அடிக்கடி கூறி வந்தார்.

தற்கொலை செய்வதற்கு சில நாட்கள் அவர் வீட்டில் இருந்து வெளியே எங்கும் செல்லவில்லை. இந்த நிலையில் உறவினர் வீட்டு பிறந்தநாள் விழாவுக்கு வரும்படி மனைவி விசிதா அழைத்தார். ஆனால் உதய்கிரண் வர மறுத்துவிட்டார்.

இதனால் அந்த விழாவில் பங்கேற்க விசிதா சென்றார். அவர் வீடு திரும்புவதற்குள் உதய் கிரண் படுக்கை அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உதய் கிரண் உடல் உஸ்மானியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உடல் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றும், அதையடுத்து ரசிகர்கள் அஞ்சலிக்கு வைக்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் அந்த முடிவு ரத்து செய்யப்பட்டது.

தொடர்ந்து, உதய்கிரண் உடல் நிம்ஸ் மருத்துவமனை சவக்கிடங்கில் வைக்கப்பட்டது. ஓமன் நாட்டில் இருக்கும் அவரது அக்கா ஸ்ரீதேவி வருகைக்காக உறவினர்கள் காத்து இருக்கிறார்கள். அவர் ஐதராபாத் வந்ததும் நாளை உதய்கிரண் இறுதி சடங்கு இ.எஸ்.ஐ. மயானத்தில் நடக்க இருக்கிறது.

இதற்கிடையே உதய் கிரண் மரணத்துக்கு திரையுலக தாதாக்களே காரணம் என்று மனித உரிமை ஆணையம் புகார் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த வழக்கறிஞர் அருன்குமார் அளித்த புகாரில், ‘‘தெலுங்கு திரையுலகம் 4 குடும்பங்களின் பிடியில் உள்ளது. அவர்கள் நினைப்பதுதான் சட்டமாக உள்ளது. இதனால் இளம் கதாநாயகர்களும், திரையரங்க உரிமையாளர்களும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே அவர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும்’’. உதய்கிரண் மரணத்துக்கு அவர்கள் தான் காரணம் என்று கூறியுள்ளார்.

மனுவை பெற்றுக் கொண்ட மனித உரிமை ஆணையம் உறுப்பினர் பேரி ரெட்டி கூறுகையில், ‘‘உதய் கிரண் குடும்பத்தில் யாராவது புகார் தெரிவித்தால் இது பற்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

தற்கொலை செய்யும் முன்பு உதய்கிரண் கடைசியாக சென்னையில் வசிக்கும் நண்பர் பூபால் என்பவரிடம் பேசி உள்ளார்.

எனவே அந்த நண்பரிடம் விசாரணை நடத்த காவல்துறையினர் முடிவு செய்து உள்ளனர். உதய் கிரணுக்கு 15 வயது இருக்கும் போது அவரது அண்ணன் தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், தற்கொலை செய்த நடிகர் உதய்கிரண் தனது கண்களை எல்.வி.பிரசாத் மருத்துவமனைக்கு தானம் செய்து இருந்தார். நேற்று எல்.வி.பிரசாத் மருத்துவமனை டாக்டர்கள் வீட்டுக்கு வந்து அறுவை சிகிச்சை மூலம் உதய் கிரண் விழித்திரையை அகற்றினர். அந்த கண்கள் பார்வையற்ற ஒருவருக்கு பொருத்தப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நடிகரின் கண்களை பெறும் அதிர்ஷ்டக்காரர் யார் என்பதை தெரிவிக்க மருத்துவர்கள் மறுத்து விட்டனர்.