ஜனவரி 31 – காஜாங் இடைத் தேர்தலை உருவாக்கியது எங்களின் அரசியல் விளையாட்டு என மக்கள் நினைத்தால் வருகின்ற காஜாங் இடைத் தேர்தலில் வாக்காளர்கள் எங்களை நிராகரிக்கலாம் என பிகேஆர் கட்சியின் வியூக இயக்குநர் ரஃபிசி ரம்லி கூறியுள்ளார்.
“அரசியல் ஜனநாயகத்தை நாங்கள் தவறாகக் கையாளுகின்றோம் என்று சிலர் சொல்கின்றார்கள். நாங்களும் ஒரு பெரிய ஆபத்தான நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றோம். அன்வாரின் எதிர்காலத்தை ஆத்திரம் கொண்டிருக்கும் காஜாங் மக்களின் கரங்களில் ஒப்படைத்திருக்கின்றோம். எங்களின் செயலுக்காக நாங்கள் மன்னிப்பும் கேட்டிருக்கின்றோம். விளக்கமும் தந்திருக்கின்றோம். எங்கள் முடிவுக்கு எதிர்ப்பு காட்ட விரும்பினால் காஜாங் வாக்காளர்கள் தாராளமாக அன்வாரை நிராகரிக்கலாம்”என்றும் ரஃபிசி தெரிவித்துள்ளார்.
“அன்வார் – காஜாங்கிலிருந்து புத்ரா ஜெயா நோக்கி” என்ற தலைப்பில் நேற்று நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் உரையாற்றியபோது ரஃபிசி மேற்கண்டவாறு கூறினார்.
“நாங்கள் எடுத்திருக்கும் முடிவு எங்களுக்கு மிகவும் வலியைக் கொடுக்கும் ஒன்றாகும். எனக்குத் தனிப்பட்ட முறையில் இந்த முடிவு வலியைத் தருகின்றது. காரணம் இதில் அன்வாரை உள்ளுக்குள் இழுத்து வந்தது நான்தான். எனவே இதற்கான பொறுப்பை நான்தான் ஏற்க வேண்டும். வேறு என்ன செய்ய முடியும்?” என உணர்ச்சிவயப்பட்ட நிலையில் ரஃபிசி கூறினார்.
“ஆனால், அம்னோவின் இனத் துவேஷத்தை வளர்க்கும் அரசியலை நாங்கள் முறியடிக்கவேண்டும். அம்னோவின் இனத் துவேஷ அரசியலை பினாங்கு மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் நமக்கு எடுத்துக் காட்டின. இதே போன்ற நிலைமை சிலாங்கூரில் ஏற்படாமல் இருக்க தடுக்க வேண்டும் என்ற முயற்சியில் மலேசிய மக்கள் தொகையின் விகிதாச்சாரத்தைப் போன்ற விகிதாச்சாரத்தைக்கொண்ட மாநிலமாகத் திகழும் சிலாங்கூரில் ஒரு பொதுவான மனிதரை முன் நிறுத்த வேண்டிய கட்டாயத்திற்கு நாங்கள் ஆளாகியிருக்கின்றோம்” என்று ரஃபிசி தனது உரையில் வலியுறுத்தினார்.
அம்னோவின் இனத்துவேஷ அரசியலை எதிர்த்து நாங்கள் போராட வேண்டியதிருக்கிறது என்றும் கூறிய ரஃபிசி, நடப்பு மந்திரிபெசாரான டான்ஸ்ரீ காலிட்டின் நிர்வாகத் திறமையை தாங்கள் பெரிதும் மதித்தாலும், இன்றைய சூழ்நிலையில் அம்னோவின் இனத் துவேஷ அரசியலை, மதச் சார்பு அரசியலை, அரசியல் தந்திரங்களை எதிர்கொள்ளக் கூடிய அரசியல் அனுபவமும் முதிர்ச்சியும் காலிட்டுக்கு இல்லை என்பதையும் தாங்கள் உணர்வதாகவும் அவர் கூறினார்.