ஜனவரி 31 – தனிப்பட்ட வருகையை மேற்கொண்டு பெங்களூருவுக்குச் சென்ற நடிகர் ரஜினிகாந்த் அங்கு அவரது வீட்டில் தங்கியிருந்ததைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள் அவரது வீட்டிற்கு படையெடுத்துக் குழுமியதைத் தொடர்ந்து அவர் அங்கிருந்து வெளியேறினார்.
எப்போதும் மாறுவேடத்தில் பெங்களூர் செல்லும் ரஜினி அங்கு தனது இளமைக்கால நண்பர்களுடன் அளவளாவி பொழுதைக் கழிப்பது வழக்கம். அவ்வாறே இந்த முறையும் அவர் அங்கு சென்று தனது சொந்த வீட்டில் தங்கியிருந்ததை உள்ளூர் தொலைக்காட்சியொன்று செய்தியாக வெளியிட அவரது ரசிகர்கள் அவரைக் காண அவரது வீட்டின் முன் குழுமத் தொடங்கினர்.
கடந்த 27ந் தேதி தனக்கு நெருக்கமான சென்னை நண்பர்களுடன் ரஜினி பெங்களூருக்குச் சென்றிருக்கின்றார். வழக்கமாக தனது அண்ணன் சத்யநாராயணா வீட்டில் தங்கும் ரஜினி, இந்த முறை ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள அவரது சொந்த வீட்டுக்குச் சென்று தங்கினார்.அவருடன் அவரது பெங்களூரு நண்பர்களும் சேர்ந்து கொள்ள விடிய விடிய பேச்சும், விளையாட்டுமாக அவர் பொழுதைக் கழித்தார் என்றும் இணையச் செய்திகள் தெரிவித்தன.
மறுநாள் 28ந் தேதி காலை அண்ணன் சத்யநாராயணா வீட்டுக் சென்ற ரஜினி அங்கு அவரின் உறவினர்களையும், நண்பர்களையும் சந்தித்திருக்கின்றார். அவரது அண்ணனையும் சந்தித்து விட்டு அதன் பின்னர் கவிபுரம் குட்டஹள்ளிபகுதிக்கு மாறுவேடத்தில் சென்று அங்கு அவர் படித்த கன்னட மாதிரிபள்ளியில் நடக்கும் கட்டுமான பணிகளை சுற்றிப் பார்த்திருக்கின்றார்.
ரஜினி கொடுத்த நன்கொடையைக் கொண்டு அந்த பள்ளி புதுப்பிக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. பின்னர் தனது இஷ்ட தெய்வமான கவிகங்காதேஷ்வர் கோவிலுக்குச் சென்று ரஜினி வணங்கினார்.
இதற்கிடையில் ரஜினி பெங்களூருவில் தங்கியிருக்கும் தகவல் பரவ நேற்று (ஜனவரி 30) அதிகாலை முதலே ரஜினி வீட்டு முன்ஆயிரக்கணக்காக ரசிகர்கள் கூடிவிட்டனர்.
இதனால்அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதனை அறிந்த ரஜினி வீட்டு மேல்மாடியில் தோன்றி கைகூப்பி ரசிகர்களை நோக்கி வணங்கினார். இருப்பினும் கூட்டம் கலையவில்லையாதலால், அங்கிருந்து ரஜினி தனது நண்பர்களுடன் தனி காரில் வீட்டின் பின் வாசல் வழியாக புறப்பட்டுச் சென்றார்.
அவர் மகான் ராகவேந்திராவின் ஸ்தலமான மந்த்ராலயம் நோக்கி புறப்பட்டு சென்றதாக கூறப்படுகின்றது.