Home நாடு “காலிட்-அஸ்மின் ஒப்பந்தம் என்று எதுவுமில்லை” – அன்வார் விளக்கம்!

“காலிட்-அஸ்மின் ஒப்பந்தம் என்று எதுவுமில்லை” – அன்வார் விளக்கம்!

546
0
SHARE
Ad

anwarபிப்ரவரி 4 – காஜாங் சட்டமன்றத்திற்கு இடைத் தேர்தலை உருவாக்குவதற்கு சிலாங்கூர் மந்திரிபெசார் ஒப்புக் கொண்டாலும் தகவல் ஊடகங்களில் உலவி வரும் ஆரூடங்களின்படி காலிட்டுக்கும் அஸ்மின் அலிக்கும் இடையில் சமரச ஒப்பந்தம் என்று எதுவும் இல்லை என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் விளக்கியுள்ளார்.

#TamilSchoolmychoice

மலேசியாகினி இணைய செய்தித் தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் அன்வார் இப்ராகிம் இந்த விளக்கத்தை அளித்தார்.

அஸ்மின் அலி தனது புக்கிட் அந்தாராபங்சா சட்டமன்றத் தொகுதியிலிருந்து ராஜினாமா செய்யாவிட்டால், தான் மந்திரி பெசார் பதவியிலிருந்து விலகப் போவதில்லை என காலிட் எவ்வித நிபந்தனையும் விதிக்கவில்லை, அது தவறான தகவல் என்பது மட்டுமல்ல, காலிட்டுக்கு நியாயமில்லாத ஒன்று என்றும் அன்வார் மேலும் கூறினார். அத்தகைய செய்தியொன்றை ஸ்டார் பத்திரிக்கையின் இணையத்தளம் வெளியிட்டிருந்தது.

“காலிட்டைப் பற்றித் தெரிந்தவராக நீங்கள் இருந்தால் அந்த செய்தியில் உண்மை எதுவுமில்லை என்பது உங்களுக்கே விளங்கும். அவர் தனது கருத்துக்களைத் தெரிவிப்பார். ஆனால் நிபந்தனைகளை விதிப்பதில்லை” என்றும் ஸ்டார் பத்திரிக்கையின் செய்திக்கு மறுப்பளிக்கும் விதத்தில் அன்வார் தெரிவித்தார்.

அதேபோன்று, 2016இல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் அடுத்த 14வது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் அஸ்மின் மந்திரிபெசாராக பதவியேற்பார் என்று கூறப்படுவதிலும் உண்மை எதுவுமில்லை. காலிட்டிடம் உங்களின் சேவை இன்னும் தேவை எனக் கூறியிருக்கின்றேன். அதே போன்று அஸ்மினிடம் நாம் அனைவரும் ஒற்றுமையாக இயங்க வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றேன்” என்றும் அன்வார் கூறினார்.

இருப்பினும், காஜாங் இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் அன்வார் மந்திர பெசாராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர்தான் காலிட்டும், அஸ்மின் அலியும் எந்த பொறுப்புகளுக்கு நியமிக்கப்படுவார்கள் என்பது தெளிவாகத் தெரியும்.