கோலாலம்பூர், பிப் 4 – காஜாங் தேர்தலில் பிகேஆருக்கு ஆதரவளிப்போம் என்று பாஸ் கட்சித் தலைவர் ஹாடி அவாங் கூறியதைத் தொடர்ந்து, அண்மையில் பிகேஆரை புறக்கணிப்போம் என்று கூறிய பாஸ் இளைஞர் பிரிவு தற்போது ஆதரவு தர முன்வந்துள்ளது.
இருப்பினும், அன்வார் இப்ராகிம் மந்திரி பெசார் ஆவதற்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக யாரும் நினைத்து விடக்கூடாது என்று அதன் தலைவர் சுஹாய்சான் கயாட் கூறியுள்ளார்.
காஜாங் சட்டமன்ற தலைவர் லீ சின் செ பதவி விலகியதில் இருந்து, பாஸ் இளைஞர் பிரிவு பிகேஆருக்கு எதிராக கருத்துக்களை கூறி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
சிலாங்கூரின் நடப்பு மந்திரி பெசார் காலிட் இப்ராகிமை நீக்கி விட்டு அந்த இடத்தில் அன்வார் இப்ராகிம் பதவி ஏற்பதாக கூறப்படுவதில் பாஸ் கட்சிக்கு உடன்பாடு இல்லை.
இதனிடையே பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு ,“பிகேஆரை புறக்கணிப்போம் என்பது இளைஞர் பிரிவு கூறுவது அவர்களது ‘தனிப்பட்ட கருத்து’. அது எந்த வகையிலும் கட்சியின் முடிவை பாதிக்காது. காஜாங் இடைத்தேர்தலை பாஸ் புறக்கணிக்காது” என நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.