பிப்ரவரி 5 – எஸ்.பி.எம் தேர்வுக்கு தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுப்பது மாணவர்களிடையே இப்பொழுது மிகவும் குறைந்துள்ள நிலையில், தமிழ்ப் பற்றுள்ள சில பெற்றோர்கள் இன்னும் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழியை தேர்வுப்பாடமாக எடுக்கச்செய்து நம் நாட்டில் தமிழை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதில் பெரும் பங்காற்றிவருகின்றனர்.
இருப்பினும் தமிழ் மொழியை தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்களின் எண்ணிக்கையோ குறைந்த அளவிலேயே உள்ளது. ஆனால் தமிழ் இலக்கியத்தை தேர்வுப்பாடமாக எடுக்கும் மாணவர்களோ விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் உள்ளனர்.
மாணவர்கள் தமிழ் இலக்கியத்தை தேர்வுப்பாடமாக தேர்வு செய்ய தயங்குவது ஏன்?
மாணவர்கள் தமிழ் இலக்கியத்தைத் தேர்வுப்பாடமாக எடுக்கத் தயங்கக் காரணம் என்ன? பெரும்பாலும் மாணவர்கள் இலக்கியப்பாடம் கடினமானது என்று எண்ணுவதும், அப்படியே படிக்க விரும்பினாலும், இலக்கியம் போதிக்கக்கூடிய ஆசிரியர்கள் அவர்களுக்குக் கிடைப்பது அரிதாக இருப்பதுவுமே முக்கிய காரணங்களாகத் தெரிகிறது.
இவற்றுக்கு நல்லதொரு தீர்வாக, முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் ‘எஸ்.பி.எம் தமிழ் இலக்கியம் தேர்வுப் பாசறை’ எனும் தொகுப்பு நூல் அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
தயக்கமின்றி மாணவர்கள் இலக்கியம் பயில இதோ தீர்வு!
இலக்கிய பாடத்தில் நாவல் மற்றும் நாடகத்தை, மாணவர்கள் படித்துப் புரிந்து அதற்கான பதிலை எழுதும் திறம் படைத்தவர்களாகவே உள்ளனர். அவர்களுக்கு ஆசிரியர் இன்றி கற்க முடியாதது கவிதையே.
அக்குறையை போக்கி மாணவர்களை இலக்கியத்தேர்வுக்கு தயார்ப்படுத்தும் முகமாக அவர்களின் கைப்பிடித்து அழைத்துச்செல்லும் ஆசானாக அமைந்துள்ளது முனைவர் முரசு நெடுமாறன் அவர்களின் எஸ்.பி.எம் தமிழ் இலக்கியம் தேர்வுப்பாசறை எனும் தொகுப்பு நூல்.
இந்த நூலில் அவர் எஸ்.பி.எம் இலக்கியத் தேர்வுக்கு பாடப்பகுதியாக வந்துள்ள 14 கவிதைகளுக்கும், ஒவ்வொரு கவிதைக்குமாக உரைநடை வடிவம் மட்டுமல்லாது, அருஞ்சொல் மற்றும் சொற்றொடருக்கான விளக்கமும் தந்துள்ளார்.
இதனால், மாணவர்களுக்கு கவிதையை புரிந்துகொள்வதில் ஏற்படும் முதல் கட்ட சிரமத்தை நூலாசிரியர் முற்றிலும் நீக்கி, மாணவர்கள் இலக்கியத்தை எடுக்க தைரியத்தை ஊட்டியுள்ளார்.
அதுமட்டுமன்றி, நூலாசிரியர் உட்பட மற்ற கவிஞர்கள் எழுதிய கவிதைகளின் படைப்புணர்வை விளக்குவதோடு, கருப்பொருள் விளக்கம் மற்றும், கவிதைகளில் பயின்றுள்ள புதைநிலை, தெரிநிலை கருத்துகளையும் விளக்கி, மாணவர்களின் சுமையை முற்றிலும் நீக்கியுள்ளார்.
தேர்வில் கேட்கப்படும் இப்படிப்பட்ட கேள்விகளைக் கண்டே மாணவர்களும் பயம் கொள்கின்றனர். மதிப்பெண்களையும் இழக்கின்றனர். ஆனால் ஆசிரியரோ இவற்றை நன்கு கருத்தில் கொண்டு மிகச் சிறப்பாக, மாணவர்கள் படித்தவுடன் தெள்ளத்தெளிவாக புரிந்துகொள்ளும்படி இத்தேர்வுப்பாசறையை அமைத்துள்ளார்.
கற்பிக்கும் ஆசிரியரின் பளுவையும் இந்நூல் வெகுவாக குறைக்கும்
தமது பல்லாண்டு கால கற்பித்தல் அனுபவத்தில் மாணவர்களின் நிலைப்பாட்டைக் கருத்தில் கொண்டு அவர்களின் அத்துணை ஐயமும் தீர்க்குமாறு கவனமாக இக்கவிதை தேர்வுப்பாசறையை நூலாசிரியர் வடிவமைத்துள்ளார். இதற்காகவே முனைவர் முரசு நெடுமாறன் அவர்களுக்கு மாணவர்களும் பெற்றோர்களும் நன்றிக்கடன் பட்டுள்ளனர். இதனால் இலக்கியம் போதிக்கும் ஆசிரியர்களின் பளுவும் குறைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
இதுமட்டுமன்றி கவிதைகளின் இலக்கணக் கூறுகளான எதுகை, மோனை, சந்தச்சீர்கள் மற்றும் அணிகளையும் விவரித்துள்ளார் ஆசிரியர். மாதிரி வினாக்களை கொடுத்துள்ளதோடு, சட்டகம் அமைத்து விடை எழுதும் பாங்கினையும் விவரித்துள்ளமை மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மாணவர்கள் இவற்றைப் பயிற்சி செய்தாலே போதுமானது. நிச்சயம் இலக்கியப்பாடத்தில் சிறப்புத்தேர்ச்சி பெறுவது திண்ணம். இலக்கியப் பாடத்தை தேர்வுப் பாடமாக எடுக்கும் மாணவர்கள் இனிமேல் பயிற்றுவிக்க ஆசிரியர் இல்லை என்று கவலை கொள்ளத் தேவையில்லை. ஒவ்வொரு மாணவரின் வீட்டிலும் முனைவர் முரசு நெடுமாறன் தமது இந்த நூல் மூலம் ஆசானாக இருக்கிறார். பயன்படுத்திக்கொள்ளவேண்டியது மாணவர்களின் பொறுப்பு.
இந்நூலின் மற்றொரு சிறப்பு, யாப்பிலக்கணம் மற்றும் அணியிலக்கணமாகும். ஆசிரியர் தாம் விளக்கவந்த அணிகளுக்கு நல்லதொரு விளக்கம் தந்துள்ளார். அடுத்த பதிப்பில், திரிபு அணியை இன்னும் தெளிவாக விளக்குவார் என்று எதிர்பார்க்கின்றோம்.
மாணவர்கள் மட்டுமின்றி அனைவரும் பயன்பெற யாப்பிலக்கணம்
‘நெல்லுக்கிறைத்த நீர் வாய்க்கால் வழியோடி, புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ என்பது போல நூலாசிரியர் மாணவர்களுக்கு தேர்வுப்பாசறை வழங்க, இந்நூல் கவிஞராக விரும்பும் அத்தனை பேருக்கும் எளிமையான அதே வேளையில் முழுமையான யாப்பிலக்கணம் கற்றுத் தரும் மற்றொரு பணியையும் செவ்வனவே செய்கின்றது.
அசை பிரித்தல் என்பதை கற்றுக்கொண்டால் அது ஓர் இனிமையான அனுபவக் கலையாகும். நூலாசிரியர் அதனை அருமையாக படிப்படியாக விளக்கியுள்ளார். அதனை அனுபவித்துக் கற்றுப் பயன்பெறுவது என்பது நம்மிடம்தான் உள்ளது.
மாணவர்களும், மற்றவர்களும் அசை பிரித்தலை முழுமையாக கற்றுத் தேர்ந்தபின், திருக்குறள் போன்ற இலக்கியங்களை அசை பிரித்துப் பயிற்சி செய்து மகிழும் வேளையில் இதில் நிச்சயம் வல்லமையும் பெறலாம்.
காலத்தைக் கடந்தும் பயனளிக்கும் நூல்
முனைவர் முரசு நெடுமாறனின் (படம்) இந்த முயற்சி எதிர்கால சந்ததியினருக்கும் மிகுந்த உறுதுணையாக விளங்கும். இதில் உள்ள இலக்கணம் தமிழை முழுமையாக கற்க விழையும் அனைவருக்குமானது. இதற்கான அவரது உழைப்பை ஒவ்வோர் அங்கத்திலும் நன்கு உணரமுடிகிறது.
மாணவர்கள் வெறும் வார்த்தைகளால் மட்டுமே அவருக்கு நன்றி கூறுவது எந்த வகையிலும் அவரது உழைப்புக்கு ஈடாகாது. மாறாக மாணவர்கள் இந்த கவிதை தேர்வுப் பாசறையின் உதவியோடு தமிழ் இலக்கியத் தேர்வுக்கு அமர்வதே அவரது அயராத இம்முயற்சிக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாகும்.
பெற்றோர்களும் மிகச் சிறந்த இந்த வழிகாட்டி நூலின் உறுதுணையோடு தங்கள் பிள்ளைகள் இலக்கியத் தேர்வெழுதி சிறந்த புள்ளிகள் பெறவும் அதன் மூலம் தமிழை இந்த நாட்டில் வளர்ப்பதற்குரிய தங்களின் பங்களிப்பை வழங்கிய பெருமையையும் அடையவேண்டும்.
இனி இலக்கியம் பயிற்றுவிக்க ஆசிரியர் இல்லாததால் அப்பாடத்தை எடுக்கமுடியவில்லை என்ற பேச்சுக்கே இடமில்லை. இந்த எஸ்.பி.எம் தமிழ் இலக்கியம் தேர்வுப்பாசறை எனும் தொகுப்பு நூலை வழங்கிய முனைவர் முரசு நெடுமாறன் அவர்களுக்கு மாணவர்களும், கவிதை ஆர்வலர்களும் மிகவும் கடமைப்பட்டுள்ளார்கள்.
-சா.விக்னேஸ்வரி