கோலாலம்பூர், பிப் 5 – இஸ்லாம் அல்லாதவர்கள் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது தொடர்பான செய்திகளையும், அது தொடர்பாக நடந்து வரும் நீதிமன்ற வழக்கு குறித்த கட்டுரைகளையும் வெளியிடுவதை நிறுத்துமாறு கத்தோலிக்க வார இதழான ‘தி ஹெரால்ட்’ க்கு அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அவ்வார இதழுக்கு உள்துறை அமைச்சு அனுப்பிய கடிதத்தில், அது போன்ற கட்டுரைகளைத் தவிர்த்து ‘பொதுமக்கள் பாதுகாப்பு’, ‘நல்லிணக்கம்’ போன்ற கட்டுரைகளை வெளியிட கேட்டுக்கொண்டது.
“தொடர்ந்து ‘அல்லாஹ்’ விவகாரம் தொடர்பான செய்திகளை வெளியிடுவதால் அது மத நல்லிணக்கத்தை பாதிப்பதோடு, நாட்டின் ஒற்றுமையை சீர் குலைக்கும். எனவே ‘அல்லாஹ்’ தொடர்பான கட்டுரைகளை இனி வெளியிட வேண்டாம் என அமைச்சரவை வேண்டிக்கொள்கிறது” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஹெரால்ட் வார இதழின் ஆசிரியர் பாதிரியார் லாரென்ஸ் ஆண்டிரியூ கூறுகையில், நீதிமன்ற முடிவுக்கு மரியாதை கொடுத்து எங்களுடைய சொந்த கட்டுரைகளில் கடந்த 7 ஆண்டுகளாக கடவுளைக் குறிக்க ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையை பயன்படுத்துவதில்லை என்று தெரிவித்தார்.
கடந்த 2009 ஆம் ஆண்டு, ஹெரால்ட் வார இதழ் கடவுளை குறிக்க ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தலாம் என்று உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. ஆனால் இந்த விவகாரத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் மேல் முறையீட்டு நீதிமன்றம் ‘அல்லாஹ்’ என்ற வார்த்தையை பயன்படுத்த தடை விதித்தது.
இதனால் அவ்வார இதழ் இவ்விவகாரத்தை கூட்டரசு நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது. அதனுடைய விசாரணை அடுத்த மாதம் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.