பிப்.13- இன்றைய காலக்கட்டத்தில் நாம் உண்ணும் பெரும்பாலான உணவுகள் அமிலத்தன்மை உடையவை ஆகும். இவை உடல் நலத்தைக் கெடுக்கின்றன.
அதேவேளை அறுகம்புல் சாறு காரத்தன்மை உடையது. இது நமது ஆரோக்கியத்திற்கு உகந்ததாகும்.
இன்றைய காலகட்டத்தில் அறுகம்புல் சாற்றைக் குடிக்க விரும்புவோர் ஆயுர்வேத மருத்துவரை அணுகி அவரது அறிவுறுத்தலின்படி அருந்தலாம்.
அறுகம்புல் (Cynodon dactylon) ஒரு மருத்துவ மூலிகையாகும். வாதம், பித்தம், சளி(கபம்) ஆகிய முக்குற்றங்களினால் உண்டாகும் நோய்கள், ஈளை, கண் புகைச்சல், குருதிப் பித்தம், சிறு நச்சுப் பூச்சிகளின் கடி ஆகியவற்றுக்கு நல்லதொரு மருந்து. குருதி தூய்மையடைய, வியர்வை நாற்றம் போக்க, உடல் அரிப்பைப் போக்க , நமைச்சல் தீர, வெள்ளைப்படுதல் நீங்க மருந்தாக உதவுகிறது.
அறுகம்புல் கட்டி, வீக்கம் என்பவற்றைக் குணப்படுத்தும். சிறுநீரைப் பெருக்கும். இரத்தக் கசிவைத் தடுக்கும். மென்மையான மலமிளக்கி. இதனால் மலச்சிக்கல் நீங்க வழி உண்டாகும். இனி அறுகம் புல்லின் அற்புதத்தன்மைகள் சிலவற்றைப் பார்ப்போம். அறுகம்புல் அமிலத்தன்மையைக் குறைக்கின்றது. நரம்பு மண்டலத்திற்கு உறுதியும் ஊட்டமும் அளித்து உடல் பலவீனத்தைப் போக்கும் ஆரோக்கியம் அளிக்கும் பலவிருத்தி பானமாக செயல்படுகின்றது.
மேலும், உடலிலிருந்து நச்சுப் பொருட்களை அகற்றி இரத்த ஓட்ட மண்டலத்தை தூய்மைப்படுத்துகின்றது. அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமான மலச்சிக்கலைப் போக்க உதவுகின்றது. அறுகம்புல்லில் பச்சயம் பரிணமித்துள்ளது. வாழ்வளிக்கும் உயிர் ஆற்றல், புரதம் கனிம உப்புக்கள் பலவும் அதில் உண்டு.
காலையில் ஒரு தேக்கரண்டி அறுகம்புல் பொடியைச் சாப்பிட்டு நீர் அருந்த வேண்டும். காலை உணவிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக இதனை மேற்கொள்வது சிறந்தது. இப்பொடியைத் தேனில் குழைத்தும் உட்கொள்ளலாம். குழந்தைகளும் பொடியை விழுங்குவது மிகவும் எளிய வழியாகும்.
‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது போல, நோயற்ற வாழ்க்கை வாழ தினமும் அறுகம்புல் சாப்பிடுவோமாக!