பிப்ரவரி 7 – கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 4, தற்போது இந்தியா மற்றும் இந்தோனேசியாவின் செல்பேசி சந்தைகளில் மீண்டும் விற்பனைக்கு வந்துள்ளது.
கடந்த மாதம் இந்தியாவில் விற்பனைக்கு வந்த இந்த செல்பேசியின் விலை 22,900 ரூபாய் (1,211.59 ரிங்கிட்) இருந்தது. தற்போது அதன் நிதி மற்றும் வர்த்தக சலுகைகளின் மூலம் அதன் விலை குறைந்து 15,000 ரூபாய்க்கு(793.620 ரிங்கிட்) விற்பனை செய்யப்படவுள்ளது.
ஜனவரி மாதம் இந்த விற்பனை தொடங்கிய போது, இவை விற்கபடாமல் இருந்த பழைய தயாரிப்புக்களாக இருக்கலாம் அல்லது புதுப்பிக்கப்பட்டிருக்கலாம் என்று புரிந்துகொள்ளப்பட்டது. ஆனால் ‘எக்கனாமிக் டைம்ஸ்’ வெளியிட்டுள்ள செய்தியில், 4 வருடங்களுக்கு முன்னர் அறிமுகம் செய்யப்பட்ட இந்த வகை செல்பேசி, தற்போது இந்தியா, இந்தோனேசியா மற்றும் பிரேசில் சந்தைகளுக்காக மீண்டும் தயாரிக்கப்படுகின்றது என்று குறிப்பிட்டுள்ளது.
ஆப்பிள் நிறுவனம் எப்போதும் தனது தயாரிப்பு செல்பேசிகளை மலிவு விலைக்கோ அல்லது அதிரடி சலுகைகள் கொடுத்தோ விற்காது என்பது குறிப்பிடத்தக்கது.