Home கலை உலகம் திரை விமர்சனம்: ‘கோலிசோடா’ – பார்க்க வேண்டிய, தமிழ் சினிமாவின் மற்றொரு முக்கிய பதிவு!

திரை விமர்சனம்: ‘கோலிசோடா’ – பார்க்க வேண்டிய, தமிழ் சினிமாவின் மற்றொரு முக்கிய பதிவு!

1961
0
SHARE
Ad

Golisoda 440 x 215பிப்ரவரி 7 – பெரிய செலவில்லாமல், எளிமையான மனிதர்களின் யதார்த்த வாழ்க்கையை, சரியான முறையில் சம்பவக் கோர்வைகளுடன், வலுவான போரடிக்காத திரைக்கதையுடன் இணைத்து வெற்றி வாகை சூடிய தமிழ்ப் படங்களின் வரிசையில் சேரும் மற்றொரு முக்கியமான பதிவு கோலிசோடா’.

#TamilSchoolmychoice

எந்த ஒரு தெரிந்த கதாநாயகனும் இல்லாமல், ஏன் கதாநாயகனே இல்லாமல் வெளிவந்து, இந்தப் படம் தமிழகத்தில்  இரண்டு வாரங்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. அந்த வெற்றியை வைத்துத்தான் இப்போது  மலேசியாவில் திரையிட்டிருக்கின்றார்கள்.

யார் கதாநாயகன், கதாநாயகி என்றெல்லாம் பார்க்காமல், நல்ல சினிமாவைப் பார்க்கப்போகின்றோம், ஆதரவு தரப்போகின்றோம் என்ற உணர்வோடு திரையரங்குக்கு வந்தீர்களேயானால், ஒரு நல்ல சினிமா அனுபவம் உங்களுக்குக் கிட்டும்.

படத்தில் வருகின்ற ஒரு காட்சியில் ஒரு பெரிய மனிதருக்கு கோலிசோடா கொடுக்கப்படுகின்றது. அதைத் திறக்கும்போது புஸ்ஸென்று கொப்பளித்துக் கிளம்பும் சோடாவைப் பார்த்து அவர் கூறுவார்: “பார்க்க எவ்வளவு சாதாரணமாக இருக்கின்றது, ஆனால் திறந்தால் எப்படி வேகமாக  வெளியே வருகிறது பாருங்கள்

படத்தின் ஒரு வரிக் கதையும் அதுவேதான்!

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்று வர்ணிக்கப்படும் சென்னையின் கோயம்பேடு சந்தையைப் பின்னணியாக வைத்து அங்கு மூட்டை தூக்கிப் பிழைக்கும் நான்கு பதின்ம வயது அனாதைச் சிறுவர்களைச் சுற்றி வலுவான சம்பவங்களோடு திரைக்கதையை அமைத்து கலக்கியிருக்கின்றார் இயக்குநர் விஜய் மில்டன்.

காதல், வழக்கு எண் 18/19 போன்ற வெற்றிப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய் மில்டன் தனது இயக்கத்தில் வெளிவரும் முதல் படைப்பான கோலிசோடா”வில்  கதை, திரைக்கதை, இயக்கம், ஒளிப்பதிவு என தனது திறன்களை முத்திரைகளாகப் பதித்திருக்கின்றார். அவரது இயக்கத்திற்கு ஒத்துழைத்திருப்பது பசங்க படத்தின் இயக்குநர் பாண்டிராஜ்ஜின் வசனங்கள்.

ஏற்கனவே பசங்க படத்தில் நடித்த வரும் கிஷோர், ஸ்ரீராம், பாண்டி, முருகேசு என்ற நான்கு பையன்களையும் மீண்டும் இதே படத்தில் வரும் ஒன்றாக இணைத்திருப்பது இந்தப் படத்தின் மற்றொரு சுவாரசியம்.

படத்தின் பலம்

Golisoda 4 boys 440 x 215படத்தின் திரைக்கதையின் பலம், ஒரே புள்ளியில்,  சற்றும் பிசகாமல் கதை நடக்கும் களமாகக் காட்டப்படும் கோயம்பேடு  சந்தையை மட்டுமே சுற்றி வருவது – அதன் பின்னணியில் நடைபெறும் சம்பவங்கள் நாம் நேரடியாகப் பார்க்கின்ற மாதிரி இயல்பாக யதார்த்தமாக அமைக்கப்பட்டிருப்பது.

அனாதைகளாக மூட்டை தூக்கிப் பிழைக்கும் பையன்களின் மீது அக்கறை செலுத்து ஆச்சி பாத்திரத்தில் சிறந்த நடிப்பை வழங்கியிருக்கின்றார் சுஜாதா என்ற நடிகை. ஏற்கனவே பல படங்களில் துணைக் கதாபாத்திரத்தில் நடித்தவர்தான் என்றாலும் இந்தப் படத்தில் தனது கதாபாத்திரத்தை தனியாகத் தூக்கி நிறுத்தியிருக்கின்றார்.

யாருமில்லாத அனாதைப் பையன்களுக்கும் ஓர் அடையாளம் வேண்டும் என்ற தன்முனைப்புத் தூண்டல் உணர்வை அவர்களின் மனதில் விதையாக ஆச்சி விதைக்க, சொந்தத்தில் சாப்பாட்டுக் கடை வைக்கின்றார்கள் அந்த சிறுவர்கள்.

அந்த சந்தையில் கந்துவட்டி வழங்கும் நாயுடு, முதலில் நல்லவர்போல் அவர்களுக்கு உதவி வழங்குகின்றார். ஆனால் பின்னர் அவரது கையாள் ஒருவனுடன் பையன்களுக்கு ஏற்படும் பிரச்சனையில், தனது கொடூர முகத்தை காட்டுகின்றார் நாயுடு.

ஆச்சிக்கும் பாடம் புகட்டி, பையன்களை அடித்துத் துவைத்து ஆளுக்கு ஒரு பக்கமாக நாயுடு அனுப்பி வைக்க, அந்தப் பையன்கள் அவர்களது பெண் தோழி மூலமாக மீண்டும் ஒன்று சேர்ந்து தங்களின் அடையாளத்தை மீட்டெடுக்க நடத்தும் போராட்டம்தான் கோலிசோடா.

படத்தில் நடிப்பவர்களில் யாருமே பிரபலங்கள் இல்லை. பவர் ஸ்டார் சீனிவாசன் மட்டும் பவர் ஸ்டாராகவே சில காட்சிகளில் வந்து போகின்றார்.

நாயுடுவின் கையாளாக மயிலு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் விஜய்முருகன் என்பவர் உண்மையிலேயே ஒரு ரவுடியை, ஒரு கந்து வட்டி முதலாளியின் கையாளை  கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கின்றார்.

படத்தில் கவருகின்ற மற்றொரு பெண் கதாபாத்திரம் அழகற்ற முகத்துடன், சோடாபுட்டி கண்ணாடியுடன் வலம் வரும் மாணவி. பெயர் சீதாவாம். அவர்தான் பிரிந்து போகின்ற பையன்களை ஒன்று சேர்த்து வைக்கின்றார்.

தொலைக்காட்சி புகழ், திருநெல்வேலி மொழிக்காரர் இமானும் படத்தில் ஒரு கதாபாத்திரமாக வளைய வருகின்றார்.

பாடல்கள் சுமார்தான் என்றாலும் கானா பாலா பாடல் மட்டும் கவர்கின்றது.

படத்தின் பலவீனங்கள்

மொத்தத்தில் “கோலிசோடா” தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு முக்கிய பதிவாக பேசப்பட்டாலும், படத்தில் பலவீனங்கள் இல்லாமல் இல்லை.

இரண்டாவது பாகத்தில் சினிமாத்தனமாக சில காட்சிகள் இருப்பதையும் சுட்டிக் காட்டத்தான் வேண்டும்.

பரபரப்புக்காக திரைக்கதையை சுவாரசியமாக அமைத்திருந்தாலும், அந்த பையன்கள் வில்லன்களோடு மோதுவதை கொஞ்சம் புத்திசாலித்தனமாக அமைத்திருக்கலாம். நேரடியாக மோதுவதும் அதில் வெல்வதும்  கொஞ்சம் சினிமாத்தனம்தான்.

முதல் பத்து நிமிடங்கள் கோயம்பேடு சந்தையின் இயல்பு வாழ்க்கையைக் காட்டும் விஜய் மில்டனின் காமெரா பின்னர் பையன்கள் வழக்கமாக  மாணவிகளை சைட் அடிக்கும் நடவடிக்கைகளில் இறங்குவதைக் காட்டுவது சற்றே போரடிக்கின்றது. இருந்தாலும் சீக்கிரமாகவே சுதாரித்துக் கொண்டு கதைக்களத்திற்குள் வந்துவிடுகின்றார் மில்டன்.

நடக்கின்ற எல்லாவற்றையும் காவல் துறையினர் பேசாமல் பார்த்துக் கொண்டு  இருப்பதும், வில்லனைப் பார்த்து பயப்படுவதும் வழக்கமாக எல்லாப் படங்களிலும் பார்ப்பதுதான்.

பையன்கள் பிரிக்கப்பட்டு நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் கொண்டு சென்று லாரிகளில் வீசப்படுவது நெஞ்சை பதைபதைக்கச் செய்கிறது என்றாலும், அந்த மாணவி தன்னந்தனியாளாக அத்தனை பேரையும் ஒரு பாடல் காட்சிக்குள் கண்டுபிடித்து ஒன்று சேர்ப்பது இன்னொரு நம்ப முடியாத சினிமாத்தனம்.

அதேபோல பையன்களும் எதுவுமே நடக்காதது போல் அந்தந்த இடங்களில் தங்கிக் கொண்டிருப்பது, மற்றவர்களைத் தேடாமல் இருப்பது, திரைக்கதையில் இருக்கும் இன்னொரு நெருடல்.

அதேபோன்று, கடைசியில் கந்து வட்டி நாயுடுவை எதிர்த்து இமானை வேட்பாளராக நிறுத்துவதும் எத்தனையோ படங்களில் பார்த்ததுதான். அந்த தேர்தல் பகுதி மட்டும் மொட்டையாக முடிவு ஏதும் காட்டப்படாமல் விடப்பட்டுவிட்டதும் ஒரு குறையாகத் தெரிகின்றது.

இருந்தாலும், இத்தகைய சில சினிமாத்தனங்களையும், சின்ன சின்ன தவறுகளையும் தவிர்த்து விட்டுப் பார்த்தால், ஒரு நல்ல சினிமாப் படம் பார்த்த மறக்க  முடியாத அனுபவத்தை “கோலிசோடா” தரும்.

-இரா.முத்தரசன்