Home நாடு தேசிய முன்னணியுடன் தேனிலவு முடிந்தது ஏன்? நஜிப் சொன்னபடி நடக்கவில்லை – ஹிண்ட்ராப் விளக்கம்!

தேசிய முன்னணியுடன் தேனிலவு முடிந்தது ஏன்? நஜிப் சொன்னபடி நடக்கவில்லை – ஹிண்ட்ராப் விளக்கம்!

741
0
SHARE
Ad

Waytha 440 x 215கோலாலம்பூர், பிப்ரவரி 9 – தேசிய முன்னணியுடனான தனது தேனிலவை பிள்ளை ஏதும் பிறக்கக்கூடிய அறிகுறிகள் ஏதும் தென்படாத நிலையில் –  சீக்கிரமாகவே முடித்துக் கொண்டுள்ள ஹிண்ட்ராப் அதன் காரணமாக வேதமூர்த்தி ஏன் ராஜினாமா செய்ய நேர்ந்தது என்பது குறித்து விளக்கியுள்ளனர்.

#TamilSchoolmychoice

ஹிண்ட்ராப் அமைப்பின் தேசிய செயலாளர் பெ.ரமேஷ் தங்கள் அமைப்பின் இணையத் தளத்தில் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்  “ஹிண்ட்ராப் சார்பாக அதன் தலைவர் துணை அமைச்சர் பதவியேற்று 8 மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இதுவரையில் தமது வாக்குறுதியின்படி பிரதமர் நஜிப், இந்தியர்களின் மேம்பாட்டுக்கான சிறப்பு பிரிவையோ அல்லது அதற்கான நிதியையோ ஒதுக்கத் தவறி விட்டார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது பிரதமர் அளித்தநம்பிக்கை” சிறிதும் இல்லாமல் மலேசிய இந்தியர்கள் பெருத்த ஏமாற்றம்  அடைந்துள்ளனர். கடந்த 8 மாதங்களாக மிகவும் அமைதியாகவும் பொறுமையாகவும் அனைத்து வழிகளிலும் தனது முயற்சிகளை மேற்கொண்ட ஹிண்ட்ராப் தற்போது பிரதமர் மீது வைத்திருக்கும் நம்பிகையை இழந்துவிட்டது. வேதமூர்த்திக்கு தேவைப்படும் அதிகாரம் மற்றும் மூலதனங்களை வழங்காமல் பிரதமர் சாக்கு போக்குகளை சொல்லி இத்தனை காலமாக இழுத்தடித்துவிட்டார்” என்று கூறியுள்ளார்.

கடந்த 18/4/2013 ஆம் தேதி (13வது பொதுத் தேர்தலுக்கு முன்பாக) ஹிண்ட்ராப் அமைப்புக்கும் தேசிய முன்னணி  கூட்டணிக்கும் இடையே காணப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் மீண்டும் மத்தியில் ஆட்சியை அமைக்கும் பட்சத்தில் கடந்த 56 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்கள் அனுபவித்து வரும் அவலங்களுக்கு நிரந்தர தீர்வுகளை அமல்படுத்த பிரதமர் நஜிப் துன் ரசாக் ஒப்புகொண்டார்.

அந்த வரலாற்று பூர்வ ஒப்பந்த கையெழுத்து நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் நஜிப், இவ்வளவு ஆண்டுகளாக மேம்பாட்டு திட்டங்களில் இருந்து இந்திய சமூகம் புறந்தள்ளப் பட்டதற்கு பகிரங்கமாக மலேசிய இந்தியர்களிடம் மன்னிப்பு கோரியதோடு ஆட்சியை கைப்பற்றியதும் அந்த அவலங்களை களைவதற்கு நிரந்தர தீர்வுகளை அளிக்கும் திட்டங்களை ஹிண்ட்ராப் அமைப்பின் பிரதிநிதித்துவத்துடன் அமல் படுத்தப்படும் என்றும் பகிரங்கமாகவே அறிவித்தார்.

“அந்த வகையில் ஹிண்ட்ராப் அமைப்பின் மீது மலேசிய இந்தியர்கள் பெரும் நம்பிக்கையை கொண்டிருந்தனர். இந்நாட்டின் பிரதமரின் அந்த உறுதிமொழியின் அடிப்படையில் தேசிய முன்னணியின் அமைச்சரவையில்  ஹிண்ட்ராப் அமைப்பு பங்கு பெற்றது. மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார அடைவுநிலைகளை உயர்த்தும் ஒரே நோக்கத்திற்காக மட்டுமே அமைச்சரவையில் ஹிண்ட்ராப் பங்கெடுக்க சம்மதித்தது” என்றும் தாங்கள் தேசிய முன்னணியுடன் இணைந்ததற்கான காரணங்களாக தனது அறிக்கையில் விளக்கியுள்ளார்.

நஜிப் இழுத்தடிப்பு – வேதமூர்த்தி பதவி விலக ஹிண்ட்ராப் முடிவு

பிரதமரின் இந்த இழுத்தடிப்பு செயல், மலேசிய இந்தியர்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு வரலாற்று நம்பிக்கை துரோகமாக கருதிஇது சம்பந்தமாக இனியும் காலம் தாழ்த்துவதில் அர்த்தம் இல்லை என்ற முடிவிற்கு ஹிண்ட்ராப் அமைப்பின் மத்திய செயலவை உறுப்பினர்கள் கடந்த 8ஆம் தேதி நடைபெற்ற உச்சநிலை சந்திப்பின் போது ஒருமனதான முடிவிற்கு வந்தனர் என்றும் ரமேஷ் கூறியுள்ளார்.

அதன் அடிப்படையில் வேதமூர்த்தி எதிர்வரும் 10/2/2014 ஆம் தேதியோடு தமது துணை அமைச்சர் மற்றும் செனட்டர் ஆகிய அனைத்து அரசு பதவிகளில் இருந்தும் பதவி விலக வேண்டும் என்ற முடிவை ஹிண்ட்ராப் எடுத்துள்ளனர்.

“மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார முன்னேற்ற திட்டங்களை அறிவித்தபடி செயல்படுத்த முடியாமல் போனதற்கு மலேசிய ஏழை இந்தியர்களிடம் ஹிண்ட்ராப் அமைப்பு மனமார மன்னிப்பு கேட்டுக் கொள்கிறது. இருப்பினும் எங்களின் போராட்டம் தொடரும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் கொள்ள வேண்டாம்” என்றும் ஹிண்ட்ராப் அமைப்பினர் தங்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.