பிப்ரவரி 11 – கைத்தொலைபேசிகளை உற்பத்தி செய்யும் மோட்டோ ரோலா நிறுவனத்தின் நடப்பு உரிமையாளரான கூகுள், 3 பில்லியன் அமெரிக்க வெள்ளி மதிப்புடைய ஒப்பந்தத்தின் கீழ் மோட்டோ ரோலாவை, சீனாவின் லெனோவா நிறுவனத்திற்கு விற்கவுள்ளது.
இந்த பங்கு மாற்ற ஒப்பந்தம் நிறைவேறியவுடன் கூகுள் நிறுவனம் 6 சதவீத பங்குகளை சீனாவின் கணினி உற்பத்தி நிறுவனமான லெனோவா நிறுவனத்தில் கொண்டிருக்கும்.
சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கூகுள் 12.5 பில்லியன் அமெரிக்க வெள்ளி விலையில் மோட்டோரோலா நிறுவனத்தைக் கையகப்படுத்தியது.
அண்மையில் கூகுள் இந்த நிறுவனத்தை லெனோவோ நிறுவனத்திற்கு விற்பனை செய்தது. இந்த விற்பனை ஒப்பந்தப்படி, அமெரிக்க வெள்ளி 1.21 மதிப்புடைய 618 மில்லியன் பங்குகளை லெனோவா கூகுள் நிறுவனத்திற்கு மாற்றிக் கொடுக்கும். இதன் மதிப்பு ஏறத்தாழ 750 மில்லியன் அமெரிக்க வெள்ளியாகும்.
அதன் காரணமாக, சுமார் கூகுள் இனி லெனோவா நிறுவனத்தில் 6 சதவீத பங்குதாரராகத் திகழும். இந்த பங்கு மாற்றம் தவிர 660 மில்லியன் அமெரிக்க வெள்ளியை ரொக்கமாகவும் கூகுள் நிறுவனத்திற்கு லெனோவா வழங்கும்.
மேலும் 1.5 பில்லியன் மதிப்புடைய 3 ஆண்டு கால உத்தரவாதப் பத்திரத்தையும் லெனோவா வழங்கும். எனவே, மோட்டோரோலா விற்பனை ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 3 பில்லியன் அமெரிக்க வெள்ளியாகும்.
இந்த விற்பனைத் தொகையின் பெரும்பகுதி மோட்டோரோலாவின் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைக்காக வழங்கப்படுகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.