Home Featured தொழில் நுட்பம் லெனோவா கருவிகளில் உள்ள தமிழ் எழுத்துருவில் ஒரு வழு!

லெனோவா கருவிகளில் உள்ள தமிழ் எழுத்துருவில் ஒரு வழு!

1732
0
SHARE
Ad

லெனோவா கருவிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் தமிழ் எழுத்துருவில் ஒரு வழு (bug, பிழை) அண்மையில் சில இடையூறுகளை ஏற்படுத்தி உள்ளது.

sellinam-lenova bug -

இது செல்லினத்தில் உள்ள வழு என்று சிலர், வழுவை விரைவில் நீக்கவேண்டும் என்ற நல்லெண்ணத்தோடு, எங்களுக்கு எழுதி இருந்தனர். நாங்களோ, பயனர் ஏதோ தவறாகத் தட்டெழுதுகிறார் என்று நினைத்து, இதற்கென்றே ஒரு பதிவை எழுதினோம். காண்க: பன்னீர் – பண்ணீர் – பரிந்துரைப் பட்டியல்.

#TamilSchoolmychoice

தீர ஆய்வு செய்து பார்த்ததில், கோளாறு செல்லினத்திலும் இல்லை, பயனரிடமும் இல்லை! கருவியில் உள்ள எழுத்துருவில்தான் என்பதை உணர்ந்தோம்.

இதுதான் வழு:  பன்னீர் என்று எழுதினால், “பன்றீர்” என்று வந்து விழுகிறது. செல்லினம் இதைச் செய்யவில்லை. செய்யாது! ‘ப’ ‘ன’ ‘புள்ளி’ ‘ன’ ‘ஈகாரக் குறி’ ‘ர’ ‘புள்ளி’, என்னும் வரிசையில் தமிழ் எழுத்துக் குறி எண்களை “பன்னீர்” என்று காட்டாமல் அந்தத் தவறான சொல்லைக் காட்டுகின்றன இந்த வழுவைக் கொண்ட கருவிகள்.

sellinam-lenova-bug‘அஞ்சல்’, ‘தமிழ்-99’ இரண்டிலும் சரியாகத் தட்டெழுதினாலும் தவறாகக் காட்டுகிறது லெனோவா A6000.

அதுவும், லெனோவா கருவிகளில் ஏற்கனவே தமிழ் எழுத்துருக்களில் சிக்கல் இருந்தது. (காண்க: லெனொவோ A6000இல் செல்லினம், செல்லினம் 4.0.7 – தேர்வுப் பதிப்பு). இதைத் தீர்ப்பதற்காக, பரிந்துரைப் பட்டியலில் நாங்கள் பயன்படுத்தும் ‘இணைமதி’ எழுத்தையும் மாற்றி, லெனோவாவில் மட்டும், கருவியில் உள்ள தமிழ் எழுத்துருவைப் பயன்படுத்தினோம். இதன் பிறகே இவற்றுள் செல்லினத்தைச் சரிவரப் பயன்படுத்த முடிந்தது. கோளாறு இதோடு நிற்கவில்லை என்பதை, தற்போது தோன்றியுள்ள வழு நமக்குக் காட்டுகிறது. தமிழ் எழுத்துகளைச் சரிவரக் கையாளாத இது போன்றத் திறன்கருவிகளை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது!

ஏற்கனெவே லெனோவா வைத்திருப்பவர்கள் என்ன செய்யலாம்?

முதலில் நாம் ஒன்றைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும். செல்லினம் போன்ற உள்ளிடு முறைகளுக்கும், திறன்பேசிகளில் உள்ள தமிழ் எழுத்துருகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. நாம் விருப்பத்திற்கேற்ப உள்ளிடு முறைகளை மாற்றிக் கொள்வதுபோல, எழுத்துருக்களை மாற்ற இயலாது – அதுவும் ஆண்டிராய்டு கருவிகளில் எல்லா செயலிகளிலும் (apps) தோன்றும் வகையில் புதிய எழுத்துருக்களைச் சேர்க்க முடியாது. இந்த வசதி நூகாட் 7.0 பதிப்பில் கூட இல்லை.

எழுத்துருச் சிக்கல்களை, திறன்கருவிகளை உற்பத்தி செய்யும் நிறுவனங்களே தீர்க்க முடியும். எனவே, அவர்களுக்குப் புகார் கொடுக்கவேண்டும். அதிகமானோர் அதே வழுவைப்பற்றி அவர்களுக்கு அடிக்கடிச் சொல்ல வேண்டும். அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பதுபோல, எவ்வளவுக்கெவ்வளவு அவர்களுக்கு நாம் புகார்களைக் கொடுக்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு அவர்களின் கவனத்தை இந்த வழுவின் பால் ஈர்க்க உதவும்.

லெனோவா கருவிகளில் தமிழுக்கு ஏற்படும் இடையூறுகளை ஆய்வதற்காகவே அந்த வகைத் திறன்பேசிகள் சிலவற்றை வாங்கி எங்கள் மென்பொருள் மேம்பாட்டுக் கூடத்தில் வைத்திருக்கின்றோம். ஆனால் இதுபோல எல்லா கருவிகளையும் எங்களால் வாங்கி வைக்க இயலாது. வாங்கினாலும் புதிய வகைகளை வாங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.

இதைவிட, பயனர்கள் இதுபோன்ற வழுக்களை அந்தந்த நிறுவனங்களிடமே புகார் கொடுப்பதே சிறந்தது. மேம்பாட்டாளர்களாகிய நாங்கள் சொல்வதைவிட, பயனர்களாகிய நீங்கள் சொல்வதே அவர்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும். புகார்களை ஏற்றுத் தீர்வுகளைக் கொடுக்காத நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் திறன்பேசிகளை அடுத்தமுறை வாங்காமல் இருப்பதே சிறப்பு. தமிழ் எவ்வளவு முதன்மையானது என்பதை அவர்களுக்கு உணர்த்துவோம்!

-நன்றி: செல்லினம்