சென்னை – மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளிவரப் போகும் படம் ‘காற்று வெளியிடை’.கார்த்தி மற்றும் அதிதி ராவ் ஹைதாரி இணையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் படம்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தின் பாடல் ஒன்றை எழுதியிருக்கும் வைரமுத்து அதுகுறித்த தனது அனுபவத்தின் பதிவை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அந்தப் பதிவு இதுதான்!
“மணிரத்னம் – வைரமுத்து – ஏ.ஆர்.ரகுமான் என்ற எங்கள் கூட்டணி
கால் நூற்றாண்டைத் தொட்டிருக்கிறது. திரும்பிப் பார்க்கும்போது திகைப்பாக இருக்கிறது.
மதித்தல் – புரிதல் – அன்பு செலுத்தல் – கலையை முன்னிட்டு மட்டும் கருத்துவாதம் நிகழ்த்தல் என்ற குணங்களால் பணியாற்றுகிறோம். எங்களால் இயன்ற அளவுக்குத் தமிழ்ச் சமூகத்தை மகிழ்ச்சியோடு வைத்திருக்கிறோம். தமிழர்களின் வாழ்த்துக்கள் இன்னும் எங்களை வளரவைக்கும் என்று நம்புகிறோம்.
‘காற்று வெளியிடை’ எங்கள் கூட்டணியின் அடுத்த படைப்பு. கதாநாயகன் விமானம் ஓட்டியாய் இருப்பதனால் வான் என்ற சொல்லை வைத்துக் காதலில் விளையாடமுடியுமா என்று இயக்குநர் கேட்டார். முடிந்த அளவு முயன்றிருக்கிறேன். வாசிக்கவும் யோசிக்கவும் வரிகளைத் தருகிறேன். கானத்திற்காகச் சில நாட்கள் காத்திருக்க மாட்டீர்களா? நன்றி”
என்ற முன்னுரையை வழங்கியிருக்கும் வைரமுத்து தொடர்ந்து தான் எழுதிய அந்தப் பாடலின் வரிகளை வெளியிட்டிருக்கிறார். அந்தப் பாடல் இதுதான்:-
வான்
வருவான்
தொடுவான்
மழைபோல் விழுவான்
மர்மம் அறிவான்
என்னுள் ஒளிவான்
அருகில் நிமிர்வான்
தொலைவில் பணிவான்
கர்வம் கொண்டால்
கல்லாய் உறைவான்
காதல் வந்தால்
கனியாய் நெகிழ்வான்
*
என்னோடி ருந்தால்
எவளோ நினைவான்
அவளோடி ருந்தால்
எனையே நினைவான்
என்னைத் துறவான்
என்பேர் மறவான்
என்னை மறந்தால்
தன்னுயிர் விடுவான்
கண்கள் கவிழ்ந்தால்
வெளிபோல் விரிவான்
கண்கள் திறந்தால்
கணத்தில் கரைவான்
இந்தப் பாடல், படத்தின் விளம்பர முன்னோட்டமாக யூடியூப்பில் வெளியிடப்பட்டு, பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களை ஈர்த்திருக்கின்றது. அந்தப் பாடலை கீழ்க்காணும் இணைப்பில் கேட்டு மகிழலாம்!
-செல்லியல் தொகுப்பு