Home நாடு எச்சரிக்கை: கடன் அட்டை பெயரில் புதிய வகை இணைய மோசடி – அதிர்ச்சி தகவல்‏

எச்சரிக்கை: கடன் அட்டை பெயரில் புதிய வகை இணைய மோசடி – அதிர்ச்சி தகவல்‏

900
0
SHARE
Ad

ONLINE SCAM

#TamilSchoolmychoice

கோலாலம்பூர், பிப் 16 – மலேசியாவில் வழிப்பறிக் கொள்ளை, கார் திருட்டு, மோட்டார் திருட்டு, வீடு புகுந்து கொள்ளையடித்தல், மாடு திருடுவது என பல திருட்டுச் சம்பவங்கள் நடந்து வருவது அனைவரும் அறிந்த ஒன்று. தினமும் பல திருட்டுச் சம்பவங்களின் காணொளிகள் முகநூல் (பேஸ்புக்) போன்ற நட்பு ஊடகங்களில் உலா வருகின்றன.

ஆனால், தற்போது கும்பல் ஒன்று புதிய வகை மோசடியைச் சத்தமின்றி செய்து வருகின்றது.நாம் கஷ்டப்பட்டு, பல கனவுகளுடன் சேமித்து வைத்த பணத்தை இருந்த இடத்தில் உட்கார்ந்து கொண்டே ஒரு சில நிமிடங்களில் பறித்துக் கொள்ளும் தந்திரத்தை இந்தக் கும்பல் செய்து வருகின்றது.

அண்மைய காலத்தில் மட்டும் எத்தனை பேர் இவர்கள் விரித்த வலையில் சிக்கி பணத்தை இழந்துள்ளனர் என்பது தெரியவில்லை. ஆனால் பாதிக்கப்பட்ட நபர்களில் ஒருவர்நேரடியாக, நமது செல்லியல் இணையத்தளத்தை அணுகி, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தனது கதையைப் பகிர்ந்துள்ளார்.

நடந்தது என்ன?GTY_iphone_call_sk_140206_16x9_992

வீட்டில் இருந்தபடி சிறு தொழில் செய்து வரும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த பெண்மணி அவர். அன்று காலை அவரது செல்பேசிக்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. எடுத்துப் பேசியவருக்கு ஆச்சர்யமும், அதிர்ச்சியும் காத்திருந்தது.

காரணம், எதிர்முனையில், நாட்டில் பிரபல தனியார் வங்கியில் இருந்து பதிவுசெய்யப்பட்ட குரல் ஒன்று பேசியுள்ளது. அதில் உங்கள் கடன் அட்டையில் தற்போது 3500 ரிங்கிட் மதிப்பிற்கு பொருட்கள் வாங்கப்படவுள்ளது. ஆம் என்றால் 1 ஐஅழுத்தவும், இல்லை என்றால் 2 ஐ அழுத்தவும், எங்கள் வாடிக்கையாளர் சேவை மையஅதிகாரியைத் தொடர்பு கொள்ள 9 ஐ அழுத்தவும் என்று கட்டளையிட்டுள்ளது.

பதறிவிட்டார் அந்தப் பெண்மணி, காரணம் அவர் இதுவரை தனியார் வங்கியில் இருந்து எந்த ஒருகடன் அட்டையையும் வாங்கியதில்லை. உடனடியாக 9 ஐ அழுத்தி வாடிக்கயாளர் சேவைமைய அதிகாரியைத் தொடர்பு கொண்டு தான் கடன் அட்டை எதுவும் வாங்கவில்லை என்பதைவிளக்கியுள்ளார்.

அவர் கூறிய அனைத்தையும் பொறுமையுடன் கேட்ட அந்த அதிகாரி, அந்த பெண்மணியின் கணக்கை ஆராய்ந்து விட்டு, 2 மாதங்களுக்கு முன்னர் பூச்சோங் அருகேயுள்ள ஒருவணிக வளாகத்தில் உள்ள தங்களது கிளையில், அந்த பெண்மணியின் பேரில் கடன்அட்டை பெறப்பட்டிருப்பதாகக் கூறியுள்ளார். அதோடு, இதுவரை கடன் அட்டையின்வழியாக 15,000 ரிங்கிட்டுக்கு மேல் பொருட்கள் வாங்கப்பட்டிருப்பதாகவும்அதிர்ச்சித் தகவலை கூறியுள்ளார்.

தலையே சுற்றிவிட்டது அந்த பெண்மணிக்கு, தான் அப்படி ஒரு கடன் அட்டையைப்பெறவில்லை என்று அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், அந்த அதிகாரியே அந்த பெண்மணிக்கு ஆலோசனை கூறியுள்ளார்.

அதாவது, இது போன்ற திருட்டு விவகாரங்களை பேங்க் நெகாரா தான் கையாள்வதாகவும், உடனடியாக இந்த தகவலை பேங்க் நெகாராவிற்கு தெரிவித்து, புகார் அளிக்கவேண்டும் என்றும் வங்கி அதிகாரி தெரிவித்துள்ளார்.

பேங்க் நெகாரா புகாரை விசாரித்து, நீங்கள் கடன் அட்டை வாங்கவில்லை என்பதை உறுதிசெய்தால், இந்த 15,000 ரிங்கிட்டிற்கு நீங்கள் பொறுப்பல்ல. அதை தான் சார்ந்துள்ள தனியார் வங்கியே ஏற்றுக் கொள்ளும் எனவும் அதிகாரி தெரிவித்துள்ளார்.

பேங்க் நெகாராவில் இது போன்ற இணைய மோசடி செய்யும் குற்றங்களை விசாரிப்பதற்கென்றே நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு பிரிவின் தொடர்பு எண்ணையும் அந்த அதிகாரிகொடுத்துள்ளார்.

பேங்க் நெகாரா சிறப்பு பிரிவா?

பேங்க் நெகாராவின் சிறப்பு பிரிவிற்கு அழைத்த அந்த பெண்மணி, தனியார் வங்கியில் தனது பேரில் வாங்கப்பட்டுள்ள கடன் அட்டை குறித்த புகாரை அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட அதிகாரி, இது போன்ற திருட்டு வேலைகள் அதிகம் நடந்து வருவதை ஒப்புக்கொண்டுள்ளார்.

தற்போது மட்டும் தன்னிடம் 10 க்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளதாகவும், இவை அனைத்தையும் நாளை சிறப்பு நீதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் அந்த பெண்மணியின் இதர வங்கி கணக்குகள் அனைத்தையும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

அதிர்ச்சியிலும், குழப்பத்திலும் செய்வதறியாது தவித்த பெண்மணி, அவர் கூறிய வழிமுறைகளை ஒவ்வொன்றாகப் பின்பற்றத் தொடங்கியுள்ளார். மொத்தம் எத்தனை வங்கி கணக்குகள் உள்ளன என்பதை கேட்டு தெரிந்து கொண்ட பேங்க் நெகாரா அதிகாரி, அந்த வங்கிக் கணக்குகள் அனைத்தையும் தற்காலிகமாக முடக்கி வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

ஒருவரின் பெயரிலுள்ள அனைத்து வங்கிக் கணக்குகளுக்கும் ஒரு ‘ரகசிய குறியீட்டு எண்’ இருக்கும் என்றும், அதே குறியீடு தான் அந்த கடன் அட்டைக்கும் வைக்கப்பட்டிருக்கும் என்றும் கூறியுள்ளார்.

அருகிலுள்ள ஏடிஎம் மையத்திற்கு சென்று அந்த பெண்மணியின் ஏடிஎம் அட்டையை ஒருமுறை பயன்படுத்துமாறும், அப்போது தான் அந்த ‘ரகசிய குறியீட்டு எண்ணை’ அறிந்து கொள்வதாகவும் கூறியுள்ளார். அதே போல் அவர் தொலைபேசியில் சொல்ல சொல்ல அவர் கூறியவழிமுறைகள் அனைத்தையும் பின்பற்றிய அந்த பெண்மணியின் , வங்கியில் உள்ள  அனைத்துபணமும் வேறு ஒரு கணக்குக்கு பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இறுதியாக, உங்கள் பணம் மிகவும் பாதுகாப்பான இடத்தில் உள்ளது. 24 மணி நேரங்கள்கழித்து மீண்டும் உங்கள் கணக்கிலேயே போடப்படும் என்றும்,இன்னும் சிலதினங்களில் பேங்க் நெகாராவில் இருந்து உங்களது புகார் குறித்து அறிக்கைவரும். அதே வேளையில், கடன் அட்டை வழங்கிய  தனியார் வங்கிக்கும் விசாரணைநகல் அனுப்பப்படும் என்றும் அந்த பேங்க் நெகாரா அதிகாரி உறுதியளித்துள்ளார்.

Credit cardஅனைத்தும் ஏமாற்று வேலை

24 மணி நேரங்கள் கழித்து தனது வங்கிக் கணக்கை சோதனையிட்ட அந்த பெண்மணிக்கு பேரிடி காத்திருந்தது. காரணம் அங்கு சொன்னபடி பணம் இல்லை. மீண்டும் அந்தபேங்க் நெகாரா எண்ணிற்கு அழைத்த போது, பெண் ஒருவர் பேசியுள்ளார்.தனது பணம் இன்னும் வங்கிக் கணக்கில் வந்து சேரவில்லை என்று கூறியுள்ளார்.

மறுமுனையில் அந்த பெண், புகார் குறித்து மூத்த அதிகாரி விசாரணை செய்ய வேண்டும் என்பதால் பேங்க் நெகாராவிற்கு வருமாறு அழைத்துள்ளார்.பெண்மணியும் அவசரஅவசரமாக பேங்க் நெகாராவிற்கு நேரிடியாக சென்று, தனது புகார் குறித்துவிசாரித்துள்ளார்.

பிறகுதான் உண்மையான விவரம் அவருக்கு தெரிந்துள்ளது. தனியார் வங்கி, கடன் அட்டை, பேங்க் நெகாரா என்று தனக்கு நடந்தது அனைத்தும் ஒரு மோசடி கும்பலின் ஏமாற்று வேலை என்பதை உணர்ந்துள்ளார்.

குறிப்பாக பேங்க் நெகாராவில் அப்படி ஒரு சிறப்பு பிரிவு இல்லை என்றும், அது போன்று வாடிக்கையாளர்களின் பணத்தை வேறு ஒரு கணக்கிற்கு எப்போதும் மாற்றும் வழக்கமில்லை என்றும் அப்பெண்மணிக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

அதேநேரத்தில், அவர்கள் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டுள்ளனர். அதாவது பேங்க் நெகாராவில் பயன்படுத்தப்படும் அதே பதிவு செய்யப்பட்ட குரலையும், வங்கி எண்ணையும் தான் அந்த மோசடி கும்பல் பயன்படுத்தியுள்ளனர்.

அதன் பின்னர், அந்த பெண்மணி இது குறித்து காவல் துறைக்கு புகார் செய்துள்ளார். விசாரணை எதுவரை உள்ளது என்பது குறித்து இதுவரை தகவல் இல்லை.

எழுகின்ற கேள்விகள்….

நாட்டின் நிதி விவகாரத்தைக் கையாளும், மிகுந்த பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட பேங்க் நெகாராவின் தொலைபேசி எண்ணை தனியார் கும்பல் எவ்வாறு பயன்படுத்த முடிகின்றது?

புகார்கள் செய்யப்பட்டிருந்தாலும், பேங்க் நெகாராவைப் பயன்படுத்தி கொள்ளையடிக்கும் இந்த கும்பல் குறித்த தகவல்களை காவல் துறையினர் இதுவரை ஏன் பொதுமக்களுக்கு எச்சரிக்கையாக விடுக்கவில்லை?

பேங்க் நெகாரா ஏன் இது குறித்து மக்களுக்கு எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை?

கேள்விகள் நீண்டு கொண்டே போகலாம்! பதில்கள் கிடைக்குமா என்பது தெரியவில்லை!

நாம்தான் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்!

 ஃபீனிக்ஸ்தாசன்

1. நன்கு படித்த மக்கள் கூட இந்த கும்பல் விரிக்கும் வலையில் விழுவது எப்படி?

2. இது போன்ற அழைப்புகள் வந்தால் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன?

3. இது போன்று மோசடி கும்பலிடம் ஏமாந்திருந்திருந்தால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டியவை?

இரண்டாம் பாகம் தொடரும் ….