காஜாங், பிப்ரவரி 16 – அன்வாரை எதிர்த்து மசீச சார்பாக தேசிய முன்னணி வேட்பாளர் ஒருவர் களத்தில் குதிப்பார், யார் அவர் என்று அனைவரும் காத்திருக்க, யாரும் எதிர்பாராத விதத்தில் முன்னாள் அமைச்சர் சைட் இப்ராகிம் கோதாவில் குதித்து, காஜாங் இடைத் தேர்தலுக்கு பரபரப்பையும், சுவாரசியத்தையும் ஏற்படுத்தியுள்ளார்.
என் மனைவி சம்மதித்தால் நான் போட்டியிடத் தயார் என அறிவித்த அவர், தற்போது தனது மனைவியும் சம்மதித்து விட்டார் என்றும் அதனால் தான் போட்டியிடுவது உறுதி என்றும் அறிவித்தார்.
கொள்கை ரீதியிலான தனது அரசியல் முடிவுக்கு ஏற்பவே தான் போட்டியிட முடிவு செய்திருப்பதாகவும், மந்திரி பெசார் காலிட்டின் தலைமைத்துவத்திற்கு தனது ஆதரவு உண்டு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சைட் இப்ராகிம் இதுவரையில் நிலையில்லாத பல அரசியல் முடிவுகளை எடுத்து, அதன் வழி அவர் மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கையையும், எதிர்பார்ப்பையும் வெகுவாகவே சிதைத்துள்ளார் என்பதுதான் பரவலாக அரசியல் நோக்கர்களின் கருத்தாகும்.
ஆழ்ந்த சிந்தனைக்குப் பின்னரும், பலதரப்பட்டவர்களின் கலந்தாலோசனைக்குப் பின்னரும், தான் இந்த முடிவை எடுத்திருப்பதாக சைட் இப்ராகிம் கூறியிருக்கின்றார்.
இருப்பினும், காஜாங் தேர்தலில் முடிவுகள் அறிவிக்கப்படும்போது ஓர் அரசியல் கோமாளியாக சைட் இப்ராகிம் உருவெடுப்பாரா அல்லது அடுத்த காஜாங் சட்டமன்ற உறுப்பினரை நிர்ணயம் செய்யும் வகையில் கணிசமான வாக்குகளைப் பெற்றார் என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுமா என்பதுதான் அனைவரும் எதிர்பார்த்திருக்கும் கேள்வியாகும்.
அன்வார் வென்று மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டால், அதிகார துஷ்பிரயோகம் நிகழும் என்றும் சைட் இப்ராகிம் எச்சரித்துள்ளார். தனது போட்டியின் நோக்கம் வாக்குகளைப் பிரிப்பது அல்ல என்றும் சைட் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இன்று காஜாங் நகரில் பத்திரிக்கையாளர்களை சைட் இப்ராகிம் சந்தித்தார். அப்போது அவரது மனைவியும் உடன் இருந்தார்.