கோலாலம்பூர்,பிப் 18- ம.இ.கா.வின் உதவித் தலைவர் டத்தோ எஸ்.சோதிநாதன் மோசடி குற்றம் செய்ததாக போர்ட்டிக்சன் ம.இ.கா.கிளையின் செயற்குழு உறுப்பினர்கள் காவல் துறையில் புகார் செய்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் உள் விசாரணை நடத்த ம.இ.கா. தலைமையகத்திற்கு உத்தரவிட்டனர். இந்த புகாரை தொடர்ந்து போலீஸார் சொந்த விசாரணையை மேற்கொண்டதாகப் போர்ட்டிக்சன் காவல்துறைத் தலைவர் அப்துல் வஹாப் ஹருண் கூறினார்.
புகார் கொடுத்தவர்களிடம் நாங்கள் வாக்குமூலத்தை பதிவு செய்தோம்.ஆனால் எந்தவொரு மோசடி குற்றச்சாட்டையும் அவர்கள் உறுதியாகக் கூறமுடியவிலை என வஹாப் ஹருண் கூறினார்.
போர்ட்டிக்சன் ம.இ.கா.கட்டிடத்தின் கீழ் தளப் பகுதியை தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வாடகைக்கு விட்டு அப்பணத்தை சோதிநாதன் வசூலிப்பதாகவும்,அந்த பணத்தை ம.இ.கா. தலைமையகத்திடம் ஒப்படைக்கவில்லை எனவும் போர்ட்டிக்சன் ம.இ.கா.கிளை உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தரப்பினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புகார் செய்த ம.இ.கா.கிளை உறுப்பினர்கள் பாதுகாப்பிற்காக தங்களது பெயரை வெளியிடக்கூடாது என கேட்டுக்கொண்டுள்ளனர்.
இந்த குற்றச்சாட்டு குறித்து ஆதாரமாக எந்த ஆவணங்களும் இல்லையெனவும் அப்துல் வஹாப் ஹருண் கூறினார்.
ம.இ.கா.வின் உதவித் தலைவர் எஸ்.சோதிநாதன் மீது கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார்தாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.