பெட்டாலிங் ஜெயா, பிப் 18 – இந்து சமய வழிமுறைப்படி இறைவனை துதிக்க போற்றும் மந்திரங்களும், பாடல்களும் அடங்கிய பிரார்த்தனை அட்டையை கடந்த வாரம் மலேசிய இந்து தர்ம மாமன்றம் அறிமுகப்படுத்தியுள்ளது.
தேசிய வகை தமிழ் பள்ளிகளில் படிக்கும் இந்து மாணவர்களுக்காக எளிதில் படிக்கும் வகையில் தமிழில் இந்த பிரார்த்தனை அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது.
‘எமது பிரார்த்தனை’ அட்டை என பெயரிடப்பட்டுள்ள இந்த அட்டையை வெளியிடும் தேசிய திட்டத்திற்கு பிரதமர் துறை அலுவலகம் மற்றும் அறக்கட்டளைகள் ஆதரவு தருவதாக இந்துதர்ம மாமன்றத்தின் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவிலுள்ள தமிழ் பள்ளிகளில் படிக்கும் இந்து மாணவர்களுக்கு இது போன்ற அட்டை வழங்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி, இந்த ‘பிரார்த்தனை அட்டை’ கோலாலம்பூரிலுள்ள பள்ளி (Sekolah Menengah Petaling) ஒன்றில் மலேசிய இந்து தர்ம மாமன்றத்தின் நிறுவனர் அய்யா சாத்தையா மற்றும் அப்பள்ளி தலைமையாசிரியர் ஆகியோர் தலைமையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
முதல் பதிப்பாக சுமார் 100,000 பிரதிகள் அச்சிடப்பட்டுள்ள இந்த அட்டையை, இந்து சமயத்தை விரும்பும் அனைவரும் படித்து பயனடையலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.