கொழும்பு, பிப் 21 -இந்தியாவுடன், நேரடி விமான போக்குவரத்தை ஏற்படுத்தும் தீர்மானம், இலங்கையின் வடக்கு மாகாண சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இலங்கையில், விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையேயான சண்டை, 2009ல் முடிந்தது.
தமிழர்கள் அதிகம் வசிக்கும், வடக்கு மாகாணத்தில், கடந்த ஆண்டு, தேர்தல் நடைபெற்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றி பெற்று, முதல்வர் விக்னேஸ்வரன், தலைமையில் ஆட்சி நடக்கிறது.
வடக்கு மாகாணத்திற்கும், இந்தியாவிற்கும் இடையே, கப்பல் மற்றும் விமான போக்குவரத்தை துவக்குவது குறித்த தீர்மானம், இந்த சட்டசபையில், நேற்று, நிறைவேற்றப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சட்டசபை உறுப்பினர், சிவாஜிலிங்கம், தீர்மானத்தை முன் மொழிந்து பேசியது இந்தியாவிலிருந்து, பலாலி மற்றும் யாழ்பாணத்துக்கு, விமானங்களை இயக்குவதன் மூலம், பொருளாதாரம் மேம்படும்.
யாழ்பாணத்தில் உள்ள காங்கேசன் துறைமுகத்தை, வர்த்தக துறைமுகமாக மாற்ற வேண்டும். தலைமன்னாருக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையே கப்பல் போக்குவரத்தை துவக்க வேண்டும். இவ்வாறு சிவாஜிலிங்கம் பேசினார்.
இது குறித்து, இலங்கை விமானத்துறை அமைச்சர், பிரியங்கரா ஜெயரத்னே குறிப்பிடுகையில், விமான போக்குவரத்து குறித்த விவகாரங்களில் தலையிட, மாகாண அரசுக்கு அதிகாரம் கிடையாது.
அவர்கள், விமான போக்குவரத்து குறித்து, தீர்மானம் நிறைவேற்றியுள்ளது நகைப்புக்கு உரிய விஷயம், என்றார்.