Home இந்தியா 3வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைய வெற்றி கூட்டணியை காங்கிரஸ் ஏற்படுத்தும்- ஜி.கே.வாசன் பேட்டி!

3வது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைய வெற்றி கூட்டணியை காங்கிரஸ் ஏற்படுத்தும்- ஜி.கே.வாசன் பேட்டி!

527
0
SHARE
Ad

21TH_VASAN_1060397fசென்னை, பிப் 24 – மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சி அமைய, வெற்றி கூட்டணியை  காங்கிரஸ் ஏற்படுத்தும் என்றும் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

எண்ணூர் துறைமுகத்துக்கு தமிழக முன்னாள் முதல்வர் காமராஜர் பெயர் சூட்டி நேற்று முன்தினம் டெல்லியில் பிரதமர் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து எண்ணூர் துறைமுகம் சார்பில்,துறைமுகத்துக்கு அதிகாரப்பூர்வமாக ‘காமராஜர்‘ பெயர் சூட்டும் விழா நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு ராயப்பேட்டை ஓய்.எம்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ளது.

#TamilSchoolmychoice

விழா நடைபெறும் மைதானத்தில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் ஜி.கே.வாசன் நேற்று மாலை பார்வையிட்டார். அவரை கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.

அப்போது மேடையில் செய்ய வேண்டிய ஏற்பாடுகளை அவர் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகளிடம் கூறினார். அமைச்சருடன் இளைஞர் காங்கிரஸ் யுவராஜ், சென்னை மாநகராட்சி முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் சென்றனர்.

அதைத் தொடர்ந்து ஜி.கே.வாசன் அளித்த பேட்டியில் ராஜிவ் கொலையாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இந்த தீர்மானத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ராஜிவ் காந்தி மரணம் இந்தியாவில் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. ராஜிவ் காந்தியுடன் பொதுமக்கள், போலீசார், காங்கிரஸ் இயக்கத்தினர் உயிர் தியாகம் செய்துள்ளனர்.

ராஜிவ் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் தண்டிக்க வேண்டும் என்பதில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான காங்கிரசார் அனைவரும் உறுதியாக உள்ளனர். இந்த சம்பவத்தை காங்கிரஸ் மறக்கவும் இல்லை, மன்னிக்கவும் இல்லை.

ராஜிவ் கொலையாளிகளை விடுதலை செய்வது என்பது நாட்டுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும். தீவிரவாதத்தை தூண்டிவிடும் வகையில் அமைந்து விடும்.  தீவிரவாதம், பயங்கரவாதத்தை ஒடுக்கவும், முற்றுப்புள்ளி வைக்கவும் மத்திய அரசு மட்டும்  நடவடிக்கை எடுத்தால் போதாது.

இந்த கடமை மாநில அரசுகளுக்கும் உள்ளது.இதை மாநில அரசுகள் உணர்ந்து செயல்பட வேண்டும். ஆட்சியாளர்கள் எதை செய்தாலும் பொதுமக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்ககூடாது.

அரசியல்வாதிகள் செயல்பாடுகளை மக்கள் கூர்ந்து கவனித்து கொண்டிருக்கிறார்கள். நாடாளுமன்ற தேர்தலுக்காக இந்தியாவில் உள்ள அனைத்து கட்சிகளும் வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியினை செய்து கொண்டிருக்கிறார்கள்.

காங்கிரஸ் என்பது அகில இந்திய கட்சி, இந்தியாவில் முதன்மையான கட்சி. 3வது முறையாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமைய வெற்றி கூட்டணியை காங்கிரஸ் ஏற்படுத்தும்.

இது சம்பந்தமாக அனைத்து மாநிலங்களிலும் உள்ள ஒத்த கருத்துள்ள கட்சிகளுடனும் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருக்கிறது. அதில் தமிழகமும் இடம் பெற்றுள்ளது.

தீவிரவாதத்தை எதிர்க்கும் கட்சிகளுடன், இந்தியாவின் ஒருமைப்பாடு, ஒற்றுமைப்பாட்டுக்கு கைகோர்க்கும் கட்சிகளுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும்.

உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்பை காங்கிரஸ் தலைமை வெளியிடும். தமிழகத்திலும் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். அதற்கான அறிவிப்பையும் காங்கிரஸ் தலைமை விரைவில் வெளியிடும் என ஜி.கே.வாசன் கூறினார்.