Home One Line P2 பாஜகவில் இணைகிறார் ஜி.கே.வாசன்!

பாஜகவில் இணைகிறார் ஜி.கே.வாசன்!

1170
0
SHARE
Ad

சென்னை – தமிழக அரசியலில் அடுத்த கட்டப் பரபரப்பாக பேசப்படுவது தமிழ் மாநிலக் காங்கிரசின் தலைவரான ஜி.கே.வாசன் தனது கட்சியைக் கலைத்து விட்டு, கட்சியினரோடு ஒட்டுமொத்தமாக பாஜகவில் இணையப் போகிறார் என்பதுதான்.

கடந்த சில வாரங்களாகவே வாசன் முக்கியமான அரசியல் முடிவு ஒன்றை எடுப்பார் எனப் பேசப்பட்டு வந்தாலும், அவர் எந்தக் கட்சியில் இணைவார் என்பது குறித்து பல ஆரூடங்கள் நிலவின.

இந்நிலையில், இன்று புதன்கிழமை காலை புதுடில்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்த வாசன், அந்தச் சந்திப்புக்குப் பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து உரையாடினாலும், பாஜகவில் இணையும் முடிவு எதனையும் அறிவிக்கவில்லை.

#TamilSchoolmychoice

கூடிய விரைவில் அவர் பாஜகவில் இணையும் முடிவை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்மைய சட்டமன்ற இடைத் தேர்தல்களில் அதிமுக தலைமையிலான கூட்டணி பெற்ற வெற்றி, விரைவில் நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தல்கள் ஆகியவை குறித்து மோடியிடம் பேசியதாக வாசன் தெரிவித்தார்.

பாஜகவில் இணைந்த பிறகு வாசன் பாஜகவின் தமிழக மாநிலத் தலைவராக நியமிக்கப்படுவார் என்றும் ஆரூடங்கள் நிலவுகின்றன.

ஒரு காலத்தில் தமிழக அரசியலில் காங்கிரஸ் கட்சியின் வழி பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்த கருப்பையா மூப்பனாரின் மகன்தான் வாசன்.

அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ்வுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக காங்கிரசிலிருந்து விலகி தமிழ் மாநிலக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியைத் தொடக்கினார் மூப்பனார். பின்னர் சோனியா காந்தியுடன் ஏற்பட்ட சமரசம் காரணமாக மீண்டும் காங்கிரசில் இணைந்தார்.

மூப்பனாரின் மறைவுக்குப் பின்னர் வாசன் காங்கிரசில் தொடர்ந்து நீடித்ததோடு, இணை அமைச்சராகவும் பதவி வகித்தார். எனினும் மீண்டும் காங்கிரஸ் தலைமைத்துவத்துடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக மீண்டும் தமிழ் மாநிலக் காங்கிரஸ் கட்சியை உயிர்ப்பித்து நடத்தி வந்தார்.

எனினும் அவரால் தனித்துக் கட்சி நடத்தி தமிழக அரசியலில் முத்திரை பதிக்க இயலவில்லை.

தற்போது பாஜகவின் இணையும் முடிவை அவர் எடுத்திருக்கிறார். விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.