Home தொழில் நுட்பம் நோக்கியாவிலும் இனி ஆண்ட்ராய்டு இயங்குதளம்!

நோக்கியாவிலும் இனி ஆண்ட்ராய்டு இயங்குதளம்!

975
0
SHARE
Ad

Nokia X 440 x 215பிப்ரவரி 26 – உலகமெங்கும் பிரபலமாக இருக்கும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை இனி நோக்கியா செல்பேசிகளும் பயன்படுத்தவிருக்கின்றன. 2014ஆம் ஆண்டுக்கான உலக செல்பேசி மாநாட்டில் (Mobile World Congress) பின்லாந்து நாட்டின் நோக்கியா நிறுவனம் நோக்கியா எக்ஸ் மற்றும் நோக்கியா எக்ஸ் + (Nokia X and X+) என்ற இருவகை கைத்தொலைபேசி ரகங்களை அறிமுகப்படுத்தி இந்த அறிவிப்பைச் செய்தது.

#TamilSchoolmychoice

ஒரு காலத்தில் கைத்தொலைபேசி தயாரிப்பில் கொடிகட்டிப் பறந்த நோக்கியா நிறுவனம் பின்னர் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன்கள் மற்றும் சாம்சுங் நிறுவனக் கைத்தொலைபேசிகளின் வருகையால் தனது சந்தையை இழந்ததோடு, பெருத்த நஷ்டத்தையும் எதிர்நோக்கியது.

பின்னர் பில் கேட்ஸ் தலைமையிலான மைக்ரோசோஃப்ட் நிறுவனம் நோக்கியா நிறுவனத்தை வாங்கியது. தனது விண்டோஸ் இயங்குதள தொழில் நுட்பத்தை நோக்கியா கைத்தொலைபேசிகளில் மைக்ரோசோஃப்ட் புகுத்தியது. ஆனால், ஏனோ விண்டோஸ் ரக கைத்தொலைபேசிகள், கூகள் நிறுவனத்தின் அண்ட்ரோய்ட் தொழில்நுட்பம் அளவுக்கு பயனர்களைக் கவரவில்லை.

இந்நிலையில், மலிவு விலை பதிப்பாக நோக்கியா எக்ஸ் ரக கைத்தொலைபேசிகளை சந்தையில் நோக்கியா முதல் முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. நோக்கியா மற்றும் மைக்ரோசோஃப்ட் என இரு பெரும் தொழில்நுட்ப  நிறுவனங்களின் கூட்டு இணைப்பில் உருவாகியுள்ள இதன் வரவேற்பு எப்படியிருக்கும் என்பது இனிமேல்தான் தெரிய வரும்.

இந்த வகை கைத்தொலைபேசிகளில் என்ன வித்தியாசம் என்றால், நீங்கள் செயலிகளை (apps) பதிவிறக்கம் செய்யும்போது மற்ற அண்ட்ரோய்ட் கைத்தொலைபேசிகளைப் போல் அல்லாது,‘நோக்கியா ஸ்டோர் (“Nokia Store”) என்ற தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யவேண்டும்.

தற்போது அண்ட்ரோய்ட் கைத்தொலைபேசிகளைப் பயன்படுத்துபவர்கள் கூகள் பிளே ஸ்டோர் (Google Play Store) என்ற தளத்திலிருந்து செயலிகளைப் பதவிறக்கம் செய்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

4 அங்குல குறுக்களவு கொண்ட திரையைக் கொண்டு, பல வண்ணங்களில் வெளிவரும் இந்த கைத்தொலைபேசிகள் தற்போது உடனடியாக சந்தைக்கு வருகின்றன. ஏறத்தாழ 60 நாடுகளின் சந்தைகளில் இவை அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

ஐரோப்பிய சந்தைகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த ரக நோக்கியா எக்ஸ் கைத்தொலைபேசிகளில், நோக்கியா எக்ஸ் 89 யூரோ (சுமார் 470 மலேசிய ரிங்கிட்) விலையிலும், நோக்கியா எக்ஸ்+ 99 யூரோ (சுமார் 525 மலேசிய ரிங்கிட்) விலையிலும் கிடைக்கின்றன.