பாட்னா, பிப் 26 – ராஷ்டிரிய ஜனதா தள கட்சி, எம்.எல்.ஏ.,க்கள், ஐக்கிய ஜனதா தளத்துக்கு செல்வதால், ஆவேசம் அடைந்துள்ள லாலு பிரசாத் யாதவ், ”என் கட்சியை உடைப்பதற்கு, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், சதி செய்கிறார்,’ என, குற்றம் சாட்டியுள்ளார்.
இதை மறுத்துள்ள நிதிஷ், ”சதித் திட்டம் எல்லாம், எனக்கு தெரியாது. எங்கள் கட்சிக்கு யார் வந்தாலும், அவர்களை வரவேற்போம்” என, பதிலடி கொடுத்துள்ளார். பீகாரில், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் ஆட்சி நடக்கிறது. முன்னாள் முதல்வர், லாலு பிரசாத் யாதவின், ராஷ்டிரிய ஜனதா தளத்துக்கு, பீகார் சட்டசபையில், 22 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
நேற்று முன்தினம், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியைச் சேர்ந்த, 13 எம்.எல்.ஏ.,க்கள், திடீரென, லாலுவுக்கு எதிராக போர்க்கொடி துாக்கினர். இவர்களில் ஐந்து பேர், சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். ‘ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சிக்கும், எங்களுக்கும் எந்த தொடர்புமில்லை.
எந்த கட்சியையும் சேராத, எம்எல்.ஏ.,க் களாக எங்களை அறிவிக்க வேண்டும்’ என, பீகார் சட்டசபை சபாநாயகரிடம், அவர்கள் கடிதம் கொடுத்தனர். அதே நேரத்தில், சட்டசபையில், ஆளும் கட்சியை ஆதரிக்கப் போவதாகவும், அவர்கள் தெரிவித்தனர். இதனால், பீகார் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டது. லாலு கட்சி, இரண்டாக உடைந்து விட்டதாக கூறப்பட்டது.
ஆனால், நேற்று முன்தினம் மாலையில், இந்த விவகாரத்தில், திருப்பம் ஏற்பட்டது. லாலு கட்சியை விட்டு, விலகுவதாக அறிவித்திருந்த, எம்.எல்.ஏ.,க்களில், ஆறு பேர், மீண்டும், லாலு கட்சிக்கு திரும்புவதாக அறிவித்தனர்.
அது போல், நேற்றும், இந்த விவகாரத்தில், பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறின. டில்லியில் முகாமிட்டிருந்த லாலு, எம்.எல்.ஏ.,க்களை பாதுகாப்பதற்காக, அவசரமாக, நேற்று, பாட்னா திரும்பினார்.
லாலுவின் மனைவியும், முன்னாள் முதல்வருமான, ரப்ரி தேவி தலைமையில், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடந்தது. இதில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருந்த, 13 எம்.எல்.ஏ.,க்களில், ஒன்பது பேர் கலந்து கொண்டனர். லாலுவும், இந்த கூட்டத்தில் பங்கேற்றார்.
இதுகுறித்து, அவர் கூறுகையில், ”முதல்வர் நிதிஷ்குமார், என் கட்சியை உடைப்பதற்காக, சபாநாயகருடன் சேர்ந்து, சதித் திட்டம் தீட்டியுள்ளார். இந்த சதித் திட்டம், அனைவருக்கும் தெரிந்து விட்டது. என் கட்சியை, நிதிஷ்குமாரால் உடைக்க முடியாது. அவரின் முயற்சி தோல்வி அடையும்,” என்றார்.
இதற்கிடையே, முதல்வர் நிதிஷ்குமார், நேற்று, டில்லியில் நிருபர்களிடம் அளித்த பேட்டியில், ”லாலு கட்சியை உடைக்கும் எண்ணம் எதுவுமில்லை. அவர் கட்சியை உடைக்க, சதித் திட்டம் தீட்ட வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை. அதே நேரத்தில், எங்கள் கட்சிக்கு யார் வந்தாலும், அவர்களை வரவேற்போம் என்றார்.
ராஷ்டிரிய ஜனதா தள வட்டாரங்கள் கூறுகையில், ‘எங்கள் கட்சியை சேர்ந்த, மூன்று, எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே, ஆளும் கட்சியுடன் இப்போது உள்ளனர். மற்றவர்கள் எல்லாம், எங்கள் கட்சிக்கு திரும்பி விட்டனர்’ என முதல்வர் நிதிஷ்குமார் கூறினார்.