Home இந்தியா பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 14 ‘சீட்!’- கந்தன் கோவிலில் பா.ஜ.க தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பிரார்த்தனை!

பா.ஜ.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 14 ‘சீட்!’- கந்தன் கோவிலில் பா.ஜ.க தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன் பிரார்த்தனை!

549
0
SHARE
Ad

Pon-Radhkrishnan-Vijayakanth-Modi-During-2011சென்னை, பிப் 27 – பா.ஜ.க- தே.மு.தி.க. பேச்சுவார்த்தையில், உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 18 தொகுதிகள் கேட்ட தே.மு.தி.க.வுக்கு, 14 தொகுதிகள் கொடுப்பதாக, பா.ஜ.க அளித்த உத்தரவாதத்தை ஏற்று, இரு கட்சிகளுக்கும் இடையே, உடன்பாடு ஏற்பட்டுள்ளது எனவும், கூட்டணி முடிவை, அதிகாரப்பூர்வமாக இன்று, தே.மு.தி.க. அறிவிக்கலாம் என, பா.ஜ.க வட்டாரம் நம்பிக்கை தெரிவித்தது.

கூட்டணி பேச்சு சுமுகமாக முடிந்ததை அடுத்து, தமிழக பா.ஜ.க  தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், நேற்று திருச்செந்தூர் சென்று, முருகனை வழிபட்டு திரும்பியுள்ளார். இந்த கூட்டணிக்கு, காரணகர்த்தாவாக செயல்பட்ட காந்திய மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன், திருவண்ணாமலை சென்று, அருணாச்சலேஸ்வரரை வழிபட்டுள்ளார்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூரில் தங்கியுள்ளார். அவரது ஒப்புதலின் பேரில், அவரது மைத்துனர் சுதீஷுடன், பா.ஜ.க தலைவர்கள் பொன்.ராதாகிருஷ்ணன், மோகன்ராஜூலு ஆகியோர்  தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

#TamilSchoolmychoice

நேற்று முன்தினம் நடத்திய பேச்சுவார்த்தையில், பா.ஜ.க  தரப்பில் தே.மு.தி.க.வுக்கு 14 தொகுதிகளுக்கு மேல் தர இயலாது என்பதை, திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதை ஏற்று, கூட்டணி முடிவை அறிவிக்கும்படியும், பா.ஜ.க தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையடுத்து சிங்கப்பூரில் உள்ள விஜயகாந்திடம்  இந்த தகவலை தெரிவித்து  அவரது ஒப்புதலுடன்  நாளை (28-ஆம் தேதி) அறிவிப்பு வெளியிடுவோம்’ என, பா.ஜ.க தலைவர்களிடம், சுதீஷ் உறுதி அளித்துள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி தே.மு.தி.க. தன் முடிவை, இன்று அறிவிக்கும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பா.ஜ.க அணியில் சேர்வதற்கான பேச்சுவார்த்தையை துவங்கிய தே.மு.தி.க. முதலில் 20 தொகுதிகள் கேட்டுள்ளது. பின் அது, 18, 16 என குறைந்தது. அதேசமயம், பா.ஜ.க  தரப்பில் 12 தொகுதிகள் என்ற நிலையிலேயே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வந்தது.

இறுதியாக, கூட்டணி பலம் நலன் கருதி, தே.மு.தி.க.வுக்கு, 14 தொகுதிகள் கொடுக்க முன்வந்துள்ளது. அதை அக்கட்சியும் ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை, முடிவுக்குவந்துள்ளது என, பா.ஜ.க வட்டாரங்கள் உறுதியாக தெரிவிக்கின்றன.

இந்நிலையில், திருச்செந்தூரில்  முருகனை தரிசித்து விட்டு வெளியே வந்த பொன்.ராதாகிருஷ்ணனிடம்  இதுபற்றி கேட்டதற்கு, எந்த விஷயமானாலும் நான்  திருச்செந்தூர் முருகனை வழிபடாமல் துவங்கியதுகிடையாது. மாதத்திற்கு ஒருமுறை வந்து விடுவேன். கூட்டணி பேச்சை துவங்கியபோது முருகனை வந்து தரிசித்தேன்.

அவரிடமே இந்த பொறுப்பை ஒப்படைத்து இருந்தேன். இப்போது பேச்சுவார்த்தை  சுமுகமாக முடிந்துள்ளதால், முருகனை வழிபட வந்தேன் என்றார் தமிழக பா.ஜ., தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன்.

இதற்கிடையில், தன் உடல் உபாதைகளுக்காக, சிகிச்சை எடுத்துக்கொள்ள சிங்கப்பூர் சென்றிருக்கும் விஜயகாந்தோடு  கூடவே சென்ற மருத்துவர் சிகிச்சையோடு  கூட்டணி குறித்து பேசி வருவதாகவும் தகவல் பரவி இருக்கிறது.

விஜயகாந்துடன் சிகிச்சைக்காக சென்றிருக்கும் மருத்துவர்  தி.மு.க.வைச் சேர்ந்தவர். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் சிங்கப்பூரிலேயே கூட்டணி குறித்து பேசி முடிப்பார்.

சிகிச்சையும், கூட்டணியும், வரும் 3-ஆம் தேதிக்குள் முடிந்துவிடும். அதன்பின், விஜயகாந்த் சென்னை திரும்பி, கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிப்பார்’ என்றும் சொல்கின்றனர். இப்படி, விஜயகாந்த் யாரோடு கூட்டணி அமைப்பார் என்பது தொடர்பாக, பல்வேறு விதமான செய்திகள் வந்து  தமிழக அரசியல் வட்டாரத்தையே  பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.