குஜராத், பிப் 27 – குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இரண்டு எம்.எல்.ஏக்கள் நேற்று முன்தினம் விலகி பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவித்தனர். பா.ஜ.க.வில் இணைவதற்காக கடந்த மாதத்தில் மட்டும் மொத்தம் 5 எம்.எல்.ஏ.க்கள் காங்கிரசிலிருந்து விலகியுள்ளனர்.
மோடி பிரதமராக குஜராத் மக்கள் விரும்புவதால், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவு தெரிவிக்கிறோம் என காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்கள் கூறியுள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் தின்ஷா படேல், குஜராத்தில் ஊழல் பெரும் அளவில் நடக்கிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை மோடி விலை கொடுத்து வாங்குகிறார். அவருக்கு ஏற்கனவே 117 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது. அப்படியிருந்தும் அவர் முறைகேடான வழியில் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குகிறார்.
மோடியின் கட்சி கூட்டம் ஒவ்வொன்றுக்கும் 4 கோடி முதல் 5 கோடி வரை பணம் செலவிடப்படுகிறது. இந்தப் பணம் எங்கிருந்து வருகிறது எனத் தெரியவில்லை. சில தொழிலதிபர்கள் அவருக்கு பணம் செலவழிக்கிறார்கள். குஜராத்தை முன்னேற்றுவதாக மோடி கூறுவது பொய் பிரசாரம்.
அவர் எதுவும் பெரிதாக செய்யவில்லை. குஜராத்தில் மக்களின் உழைப்பால் முன்னேறுகிறது. மோடி பிரதமரானால், அவர் நாட்டை அழித்து விடுவார்’’ என்றார் மத்திய அமைச்சர் தின்ஷா படேல்.