புதுடெல்லி, பிப் 28 – ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கடைசி அமைச்சரவைக் கூட்டம் இன்று கூடும் நிலையில், அதில் ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது, மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலை படியை உயர்த்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் இன்று கூடும் அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது. தெலுங்கானா மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் கிரண் குமார் ரெட்டி பதவி விலகி இடைக்கால அரசுக்கு தலைமை வகித்து வருகிறார். அதனால் ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவது குறித்து இன்றைய கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.
இதே போல் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலை படியை 10% உயர்த்துவது குறித்தும் அமைச்சரவையில் முடிவு எடுக்கப்படுகிறது. இதன் மூலம் அகவிலைப்படி 100% அதிகரிப்பதால் அதில் பாதியை அடிப்படை ஊதியத்தில் இணைப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்கள் 30 லட்சம் பேரும் பயன் அடைவார்கள். இதே போல் பி.எப் எனப்படும் வருங்கால வைப்பு நிதி உறுப்பினர்களுக்கான குறைந்த பட்ச ஓய்வு ஊதியம் 1000 ரூபாயாக உயர்த்தவும் திட்டமிடப்படுள்ளது. இதே போல் மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை 60-ல் இருந்து 62-ஆக உயர்த்துவது குறித்தும் அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படுகிறது.
ராகுல் காந்தியின் கனவு திட்டமாக இருக்கும் ஊழலுக்கு எதிராக மசோதாவை அவசரமாக சட்டம் கொண்டுவருவது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களின் தேர்தல் செலவினை 40 லட்சம் ரூபாயில் இருந்து 70 லட்சம் ரூபாயாக உயர்த்துவது குறித்தும் இன்றைய கூட்டம் முடிவு செய்கிறது.