டெல்லி, மார் 3 – சட்டங்கள் இயற்றுவதால் மட்டுமே ஊழலை ஒழித்து விட முடியாது, உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற இலட்சியம் இருக்க வேண்டும். அதற்கு அனுபவமும், வலிமையும் வாய்ந்த தலைமையும் தேவை’ எனத் தெரிவித்துள்ளார் பாஜக பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி. விரைவில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தல் வேலைகளில் கட்சிகள் மற்றும் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றதன.
பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி நாடு முழுவதும் பிரச்சாரக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். இந்நிலையில் பிரபல இந்தி நாளேடு ஒன்றுக்கு மோடி அளித்துள்ள சிறப்பு பேட்டியில் ‘சட்டங்களால் மட்டும் ஊழலை ஒழித்து விட முடியாது’ என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அப்பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது, நாடு இப்போது முடிவு எடுக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறது என்று நான் உறுதியாக நம்புகிறேன். 3-வது அணி என்பது நாடு பெரும் விலை கொடுக்க வேண்டிய நிலையை ஏற்படுத்தி விடும். தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டியதும், மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றத்தக்கதுமான அரசுதான் மத்தியில் தேவை.
ஊழலை வெறும் சட்டங்களால் மட்டுமே ஒழித்து விட முடியாது என்று நான் உறுதியாக நம்புகிறேன். உண்மையிலேயே ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற லட்சியம் இருக்க வேண்டும். அதற்கு அனுபவமும், வலிமையும் வாய்ந்த தலைமையும் (பிரதமர்) தேவை. ஊழலை வேரோடு வீழ்த்துவதற்கு இது அவசியம். அந்த வகையில், மத்தியில் பாரதீய ஜனதா ஆட்சி அமைகிறபோது, ஊழலை சகித்துக்கொள்ளாத அளவில் கொள்கை வகுத்து பின்பற்றப்படும் என்ற வாக்குறுதியை வழங்குகிறேன்.
அரசியல் எதிரிகள் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் தொடுக்கிறேன் என்று சொல்லப்படுவதாக கூறுகிறீர்கள். தனிப்பட்ட தாக்குதல்களை நான் நிறுத்தினாலும்கூட, நாட்டு நலனின் அடிப்படையில் மன்னராட்சி போன்ற பரம்பரை அரசியலை விமர்சிக்கிறேன். இதை தனிப்பட்ட விமர்சனமாக கருதி விடுகின்றனர். நான் சர்வாதிகாரியா…? ஒரு சர்வாதிகாரி ஆகிற அளவுக்கு நான் துணிச்சல் மிக்கவன் என்று என் மீது குற்றம் சாட்டப்படுகிறது.
அதை நான் நிராகரிக்கிறேன். நாட்டில் இந்த நாளில், முடிவுகள் எடுக்க முடியாத நிலைதான் ஒழுங்குமுறை என்ற சூழல் உருவாகி விட்டது. உறுதியான முடிவு எடுக்கிற தலைமை, இப்படிப்பட்ட விமர்சனங்களை எதிர்கொள்ள வேண்டியதாகி விடுகிறது என பாஜகவின் பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி கூறினார்.