பினாங்கு, மார்ச் 3 – பினாங்கு பெரு நிலத்தையும், தீவையும் இணைக்கும் சுமா 24 கிலோ மீட்டர் நீளத்தை கொண்ட இரண்டாவது பாலத்தின் திறப்பு விழா, கடந்த சனிக்கிழமை (மார்ச் 1) இரவு கோலாகலமாக முறையில் நடைபெற்றது.
கடந்த 2007 ஆம் ஆண்டு தொடங்கிய இப்பாலத்தின் கட்டுமானப் பணிகள், இடையில் ஏற்பட்ட பல தடைகளைக் கடந்து வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
சுமார் 4.5 பில்லியன் ரிங்கிட் செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள இப்பாலம் தெற்காசியாவிலேயே மிக நீளமான பாலமாகக் கருதப்படுகின்றது.
இப்பாலத்தை அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்த பிரதமர் நஜிப் துன் ரசாக், பினாங்கில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும், அம்மாநில மக்களுக்கு தேசிய முன்னணி அளித்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதற்கு, வெற்றிகரமாக கட்டி முடிக்கப்பட்ட இப்பாலம் ஒரு உதாரணம் என்று குறிப்பிட்டார்.
மேலும், பினாங்கில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க இப்பாலம் மிக உதவியாக இருக்கும் என்று கூறிய நஜிப், இதனை தொடங்க உதவிய முன்னாள் பிரதமர்களான மகாதீருக்கும், அப்துல்லா படாவிக்கும் தமது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
அதோடு, கட்சி சார்பின்றி மக்கள் அனைவரும் இப்பாலம் குறித்து பெருமிதம் அடையலாம் என்றும் நஜிப் தெரிவித்தார்.
தற்போது ஒரு மாத காலம் இப்பாலத்தை மக்கள் இலவசமாகப் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.