கோலாலம்பூர், மார்ச் 6 – காஜாங் இடைத்தேர்தலில் போட்டியிடும் மசீச வேட்பாளர் சியூ மெய் பன் நிச்சயம் வெற்றியுடன் கர்ஜனை செய்வார் என்று முன்னாள் மசீச தலைவரான டாக்டர் சுவா சொய் லெக் கூறியுள்ளார்.
கடந்த 2010 ஆம் ஆண்டு சுவா தலைவராக இருந்த காலத்தில், அவர் கறை படிந்தவர் என்று தெரிந்தவுடன் சியூ தைரியமாக தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று சியூ மசீச வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து காஜாங் தொகுதி வாக்காளர்களுக்கு பிரச்சாரம் செய்யப்பட்டு வருகின்றது.
ஆபாச காணொளி விவகாரத்தில் சிக்கியதால் சுவா ஒரு கறை படிந்த அரசியல்வாதியாகக் கருதப்பட்டார்.
அதோடு, அந்த காணொளி வெளியான சமயத்தில் பொதுமக்கள் முன்னிலையில் அதை ஒப்புக்கொண்ட சுவா, தனது உதவித்தலைவர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பின்னர் மீண்டும் போட்டியிட்டு தலைவராக ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், சியூ குறித்து சுவா சொய் லெக் மிக உயர்வாக தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
“அவர் ஒரு நேர்மையான பெண். கறைபடிந்தவர்கள் யாருக்கும் அவர் ஆதரவு தெரிவிக்கமாட்டார்” என்று சுவா கூறினார்.
“அன்வாரும் கறைபடிந்தவர் தான். அவரின் மீது ஓரினப்புணர்ச்சி வழக்கு உள்ளது. ஆபாச காணொளியும் வெளியிடப்பட்டது. ஆனால் அது குறித்து இன்னும் அவர் சரியான பதில் கூறவில்லை. எனவே கறைபடிந்த அன்வாருக்கும் ஆதரவு கிடைக்காது” என்றும் சுவா தெரிவித்தார்.
அன்வாரை ஒப்பிடுகையில் சியூ ஒரு கறைபடியாத முத்து என்றும் சுவா தெரிவித்தார்.