கிரீமியா, மார் 6 – கிரீமியாவை ஆக்ரமித்துள்ள ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைக்கு தகுந்த விலை கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும் என அமெரிக்காவும், இங்கிலாந்தும் கூட்டாக தெரிவித்துள்ளன. உக்ரைன் சுயாட்சி பிரதேசமான கிரிமியாவை தனது ராணுவ கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளதுடன், அங்கு தனது ராணுவ பலத்தையும் ரஷ்யா அதிகரித்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா,இது குறித்து இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனுடன் ஆலோசனை நடத்தினார். அதன் பிறகு வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனின் இறையாண்மை மற்றும் ஒருமைபாட்டிற்கு ரஷ்யாவின் நடவடிக்கை பாதகம் விளைவித்துவிட்டதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இது போன்ற அத்துமீறல்களுக்கு ரஷ்யா பலமுறை விலை கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர்கள், இனி ரஷ்யாவில் முதலீடு செய்ய வெளிநாட்டினர் தயங்குவார்கள் என கூட்டாக எச்சரித்துள்ளன. இதனிடையே இவ்விவகாரத்தில் பாரிசில் அமெரிக்கா நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையை ரஷ்யா பாதியிலேயே முறித்து கொண்டதால் பிரச்சனை தொடர்ந்து நீட்டிக்கிறது.
இது குறித்து அங்கிருந்த செய்தியாளர்களிடம் பேசிய உக்ரைன் வெளியுறவு அமைச்சர், ரஷ்யாவின் மனநிலையில் மாற்றம் வரும் என நம்புவதாக தெரிவித்தார். பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து ஆதரவு திரட்டப் போவதாகவும் அவர் கூறினார்.