Home கலை உலகம் முதல் நாள் திரைவிமர்சனம்: ‘நிமிர்ந்து நில்’ – முதல் பாதியில் மட்டும் நிமிர்ந்து நிற்கிறது!

முதல் நாள் திரைவிமர்சனம்: ‘நிமிர்ந்து நில்’ – முதல் பாதியில் மட்டும் நிமிர்ந்து நிற்கிறது!

760
0
SHARE
Ad

Nimirnthu-Nilமார்ச் 10 – நேர்மையாக நட, உண்மையே பேசு என்று சிறு வயது முதல் அறிவுரை கூறியே வளர்க்கப்பட்ட ஒருவன் இளைஞனாகி இந்த சமூகத்தில் சுயமாக வாழத் தொடங்கும் போது, எதிர்கொள்ளும் சமூக அவலங்களை அவன் எப்படி கையாள்கிறான் என்பதை ‘நிமிர்ந்து நின்று’ சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் சமுத்திரக்கனி.

டிராபிக் போலீஸிடம் நூறு ரூபாய் லஞ்சம் கொடுக்க மறுப்பதால், ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவன் என்ன கதிக்கு ஆளாகிறான் என்பதை முதல் பாதி முழுக்க இயல்பாக காட்டியிருக்கும் திரைக்கதைக்கு பாராட்டுக்கள். ஆனால் இரண்டாம் பாதி முழுக்க காலங்காலமாக பின்பற்றி வரும் ஹீரோயிஸத்தை கலந்து இப்படத்தை வழக்கமான  தமிழ் சினிமாவாக மாற்றிவிட்டது ஏமாற்றத்தை அளிக்கிறது.

“பைக்கில இருந்து சாவிய எடுக்கணும்னு சட்டம் எதுவும் இருக்கா சார்?” என்று ஜெயம்ரவி நீதிபதியை பார்த்து கேட்கும் கேள்வி தமிழகத்தில் இருசக்கர வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொரு இளைஞனின் மனதிலும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எழுந்த கேள்வியாகத் தான் இருக்கும்.

#TamilSchoolmychoice

“இவரு சாவிய எடுத்திட்டா? எங்கட்ட வேற சாவி இல்லையா?” என்று இளைஞன் ஒருவன், வேறு சாவியை பயன்படுத்தி தனது இரு சக்கர வாகனத்தை ஓட்டிச் சென்று டிராவிக் போலீசிடமிருந்து தப்பிக்கும் வழிமுறை, லஞ்சம் கொடுத்து கொடுத்து பழகிப் போனவர்களின் கண்டுப்பிடிப்பாகத் தான் இருக்கும்.

படம் முழுக்க பின்னணி இசையில் பலம் சேர்த்திருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். பாடலில் கானா பாலா பாடும் பாடலும், ஜெயம் ரவி ஹீரோவாக உருவெடுக்கும் பாடலும் ரசிக்க வைக்கிறது. ஜீவனின் ஒளிப்பதிவு நேர்த்தியாக உள்ளது.

அரவிந்த் சிவசாமி கதாப்பாத்திரத்தில் அப்பாவி இளைஞனாகவும், ரெட்டி கதாப்பாத்திரத்தில் ஆந்திரவாசி போலவும் இரட்டை வேடங்களில் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் ஜெயம் ரவி.

சரத்குமார், நாசர், சூரி, நீயா நானா கோபிநாத், சுப்பு பஞ்சு, தம்பி ராமையா போன்றவர்களின் இயல்பான நடிப்பு ரசிக்க வைக்கிறது.

அதே வேளையில், கு.ஞானசம்பந்தம், சித்ரா லக்சுமணன் போன்றவர்களின் நடிப்பு அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கிறது.

“இன்னைக்கு சூடா ஒரு செய்தியை போடுவாய்ங்க.. அது என்னன்னு நாம யோசிச்சிகிட்டு இருக்கும் போதே… நாளைக்கு வேறு செய்திக்கு போயிருவாய்ங்க… ஆனா நம்மள மட்டும் எப்பவும் பதட்டமாவே வச்சிருப்பாங்க” என்ற வசனம் மீடியாக்களுக்கு கொடுக்கும் சூப்பர் டோஸ்.Nimirnthu-Nil-poster-1-818x1024

“நம்ம நாட்டுல மட்டும் தான் எல்லாம் கூட்டமா இருக்குற மாதிரி இருக்கும் ..ஆனா தனித்தனியா இருப்பாய்ங்க”, “நீ இந்த சொசைசிட்டிக்கு பிட் இல்ல… இந்தா இவள கல்யாணம் பண்ணிக்கிட்டு எங்கையாவது போய் தொலை” என்று ஜெயம்ரவியை பார்த்து சூரி பேசும் வசனங்களும், அவரது முகபாவனைகளும் கைதட்டும் ரகம்.

எதற்காக அரசாங்க அதிகாரிகள் லஞ்சம் வாங்கும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் என்று அவர்களின் குடும்பப் பிண்ணனியில் இருந்தும் ஆராய்ந்திருப்பது இயக்குநரின் சாமர்த்தியம்.

“பதினஞ்சு நாள்ல முடிய வேண்டிய ஒரு வேலைக்கு அவகாசமே கொடுக்காம, உடனே நடக்கனுன்னு நினைக்கிற அந்த இடத்தில தான் லஞ்சம், ஊழல் தொடங்குது” என்ற வசனம் லஞ்சம் கொடுப்பவர்களின் மண்டையில் நச் சென்று சுத்தியலால் அடித்ததை போன்ற உணர்வை ஏற்படுத்துவது உறுதி.

முதல் பாதியோடு கதாநாயகி அமலா பாலுக்கு படத்தில் வேலையே இல்லாமல் போய்விட்டது. இடைவேளைக்குப் பிறகு அவ்வப்போது வந்து போகிறார்.

படத்தில் வரும் கார் துரத்தும் சண்டைக் காட்சிகள், அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்தை காரில் இருந்தபடியே தாவிப் பிடிப்பது போன்ற காட்சிகளை தவிர்த்து படத்தை செயற்கைத்தனம் இல்லாமல் காட்டியிருந்தால் நிச்சயம் ரசிக்கப்பட்டிருக்கும்.

இல்லாத ஒருவருக்கு பிறப்புச் சான்றிதழ் முதல் பாலியல் வழக்கு வரை தொடுப்பது அரசாங்க அதிகாரிகளின் மெத்தனத்தனத்திற்கு கொடுக்கப்பட்ட ‘சாட்டை’ அடி.

ஆனால் போலிச் சான்றிதழ் பெற உதவிய அந்த 147 அரசாங்க அதிகாரிகளையும் காமெடி கும்பல் போல் சித்தரித்து காட்சிகளை நகர்த்தியிருப்பது திரைக்கதைக்கு மிகப் பெரிய தொய்வு. பின்பாதி முழுக்க திருப்பங்கள் எதுவும் இன்றி திரைக்கதை தள்ளாடிவிட்டது என்றே சொல்ல வேண்டும்.

மக்கள் கோஷத்திற்கு நடுவே ஹீரோ விடுதலையாவது நீதிமன்ற வாசலிலேயே சண்டை போன்ற அதர பழைசான காட்சிகளை பார்த்து பார்த்து அலுப்பு தட்டிவிட்டது.

மொத்தத்தில் இடைவேளை வரை வசனங்களாலும், காட்சிகளாலும் சமுதாயத்தில் நடக்கும் அவலங்களை நேர்மையாக நிமிர்ந்து நின்று சொல்லும் திரைக்கதை, இடைவேளைக்குப் பிறகு சமூக அவலங்களை ஒழிக்க ஹீரோ கையாளும் வழிமுறைகளில், கமர்சியல் சினிமா பாணியை கையாள்வதால் குனிகிறது.

– செல்லியல் விமர்சனக் குழு