கொழும்பு, மார்ச் 14 – இலங்கையில் நடந்த போர், விடுதலை புலிகளுக்கு எதிரானது. தமிழர்களுக்கு எதிரானதல்ல என, அந்நாட்டு அதிபர் ராஜபக்சே தெளிவு படுத்தியுள்ளார். இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலை புலிகளுக்குமிடையே, 30 ஆண்டுகளாக நடந்த சண்டையில், பல ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சண்டையில் போது மனித உரிமை மீறல் நடந்ததாகவும், இது குறித்து சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும், என, ஐ.நா. மனித உரிமை ஆணையத் தலைவர், நவநீதம் பிள்ளை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனிவாவில் தற்போது நடக்கும், சர்வதேச மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து, இலங்கை அதிபர், ராஜபக்சே கூறியதாவது, இலங்கையில் நடந்த சண்டை, பயங்கரவாதத்தில் ஈடுபட்ட விடுதலை புலிகளுக்கு எதிரானது.
தமிழர்களுக்கு எதிரானதல்ல. தமிழர்களுடன் சண்டை நடந்திருந்தால், இலங்கையின் தெற்கு பகுதியில், சிங்களர்களுடன் வசிக்கும் தமிழ் மக்கள், எப்படி மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் வாழ முடியும். சிறுபான்மை மக்களாகிய முஸ்லிம்களையும், இலங்கை அரசு பாதுகாக்கிறது.
நம் நாட்டில் மதசார்பின்மை எங்கும் காணப்படுகிறது. வெளிநாட்டு உதவி பெறும் சில தனியார் அமைப்புகள் தான், இலங்கையில் மத வேறுபாடு உள்ளதாக பிரசாரம் செய்கின்றன என ராஜபக்சே கூறினார்.