ஆப்கானிஸ்தான், மார்ச் 19 – ஆப்கானிஸ்தானின் ஃபர்யாப் மாகாணத்தின் தலைநகரான மைமானா பகுதியில் உள்ள ஆளுநர் மாளிகையின் அருகே காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருக்கும் பொழுது, கைவண்டியில் வந்த தீவிரவாதி ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தான்.
இதில் 3 குழந்தைகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். 27 பேர் படுகாயமடைந்துள்ளனர் பலியானவர்களில் பலர் சிறு தொழில் செய்யும் வியாபாரிகள் என்று கூறப்படுகிறது. இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த இயக்கமும் பொறுப்பேற்காத நிலையில்,
ஆப்கானிஸ்தானில் அடுத்த மாதம் நடைபெறவிறுக்கும் அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் வகையில் தாக்குதல் நடத்துவோம் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டில் மட்டும் நடந்த தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் சுமார் 2,959 அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர், 5.656 பேர் படுகாயமடைந்துள்ளனர், இது அதன் முந்தைய ஆண்டைவிட 14% அதிகம் என ஐ.நா. சபை அறிவித்திருக்கிறது.