மார்ச் 19 – ‘மலேசிய விமானம் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது’ இப்படி ஒரு வாசகம் அடங்கிய காணொளியை சமீபத்தில் ஒரு முறையாவது பேஸ்புக்கில் பார்த்திருப்பீர்கள்.
உடனடியாக அந்த காணொளியை பார்த்து விட அதன் இணைப்பிற்கு சென்று பார்த்தால், அதில் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கும். முதலில் அதை பிறருக்கும் பகிர வேண்டும் என்று கூறப்படும். பின்னர் நமது தனிப்பட்ட தகவல்கள் எதையாவது பதிவு செய்யுமாறு கூறும். இப்படியாக கேள்விகள் நீண்டு கொண்டே போகும்.
கடைசி வரை நம்மால் அந்த காணொளியை பார்க்கவே முடியாது. காரணம் இது போன்ற அட்டூழியங்களை சில சமூக விரோதிகள் இணையத்தளங்களில் செய்து வருகின்றார்கள் என்று சைபர் கிரைம் அதிகாரிகள் கூறுகின்றனர்.
இவ்வாறு பரப்பப்படும் போலி காணொளிகளை நம்ப வேண்டாம் என்றும் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
மாயமான மலேசிய விமானம் MH370 வை தேடும் பணியில் மலேசியாவும், உலக நாடுகளும் தவித்துக்கொண்டிருக்கும் நிலையில், சில விஷமிகள் சுயலாபத்திற்காக விமானம் பற்றி தவறான வதந்திகளை இணையத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
சமீபத்தில், டுவிட்டரில், MH370 விமானம் ஒரு கடல் பரப்பில் காணப்பட்டதாகவும், விமானத்திலிருந்து சுமார் 50 பயணிகள் மீட்கப்பட்டதாகவும் காணொளி மூலம் பரப்பப்பட்டது.
இது குறித்து தீம்பொருள் உளவுத்துறை ஆய்வாளர் (Malware Intelligence analyst) கிறிஸ் பாய்ட் கூறுகையில்,”இதுபோன்ற பதற்றமான சூழ்நிலைகளைப் பயன்படுத்தி இணைய தகவல் திருடர்கள், தவறான செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். மாயமான விமானம் பற்றிய போலி காணொளிகளைப் பரப்புவது ஒரு தவறான செயலாகும். இந்த காணொளிகள் பேஸ்புக்கில் இருந்து டுவிட்டருக்கும் அனுப்பப்படுகின்றது”
“பேஸ்புக்கில் பரப்பப்படும் இது போன்ற காணொளிகளை காண்பதற்கு, அதை பிறருக்கும் பகிர வேண்டும் (Share) என்ற விதிமுறை விதிக்கப்படும். அவ்வாறு பகிரும் போது தனிப்பட்ட தகவல்கள், தொலைபேசி எண்கள் போன்றவைத் திருடப்பட வாய்ப்புள்ளது” என்றும் கிறிஸ் தெரிவித்தார்.
எனவே இது போன்று நட்பு ஊடகங்களில் பரபரப்படும் MH370 பற்றிய போலி காணொளிகளை நம்பி அதை பிறருக்குப் பகிர வேண்டாம் என்றும் கிறிஸ் குறிப்பிட்டுள்ளார்.