கோலாலம்பூர், மார்ச் 20 – விமானம் மாயமான விவகாரத்தை மலேசிய அரசாங்கம் கையாளும் விதம், மீண்டும் உலகளவிலான ஊடகங்களின் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.
காரணம் மாயமான விமானத்தில் பயணித்த சீனாவைச் சேர்ந்தவர்களின் உறவினர்களை, செய்தியாளர்களிடம் பேச காவல்துறை அனுமதிக்க மறுத்ததோடு, அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து இழுத்துச் சென்றுள்ளனர்.
காவல்துறையின் இந்த கடுமையான நடவடிக்கை கண்டு அந்நிய நாட்டு செய்தியாளர்கள் பலர் அதிர்ச்சியும், ஆச்சர்யமும் அடைந்துள்ளனர்.
டென்மார்க்கை சேர்ந்த டிவி2 செய்தியாளர் பெஞ்சமின் கர்ஸ்டெயின் மலேசியாகினி இணையத்தளத்திடம் கூறுகையில், “சீன பயணிகளின் உறவினர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளனர். அவர்கள் தங்கள் கவலைகளை வெளிப்படுத்த நினைக்கிறார்கள். ஆனால் அவர்கள் பேசுவது தடுக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இந்த செயல் அவர்களைப் பாதுகாக்கவா? அல்லது செய்தியாளர்களிடம் எதுவும் தெரிவித்துவிடக்கூடாது என்பதற்காகவா?… நிச்சயம் இது மலேசியாவிற்கு அவப் பெயரை ஏற்படுத்தும்” என்று தெரிவித்துள்ளார்.
பத்திரிக்கை சுதந்திரத்திற்கு எதிராக காவல்துறையினரின் இந்த செயல் அமைந்துள்ளதாகவும் பெஞ்சமின் குறிப்பிட்டுள்ளார்.
சீனப் பயணிகளின் உறவினர்கள் சிலர் நேற்று கேஎல்ஐஏ விமான நிலையத்தில் உள்ள சமா சமா தங்கும் விடுதிக்கு அழைத்து வரப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஒரு தனி அறையில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
அதனை அறிந்த செய்தியாளர்கள் அந்த அறைக்கு வெளியே முற்றுகையிட, காவல்துறை அவர்களை வலுக்கட்டாயமாக அங்கிருந்து நகரும் படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இருப்பினும், பயணிகளின் உறவினர்களோடு பேச முயன்ற சில செய்தியாளர்களிடம் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.
இதனால் கடும் அதிருப்தி அடைந்த செய்தியாளர்கள் காவல்துறையின் நடவடிக்கை குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன விமானம் பற்றி இன்னும் உறுதியான தகவல்கள் தெரியாத நிலையில் பயணிகளின் உறவினர்களிடம் பேச விடாமல் தடுக்கப்பட்டது ஏன்? என்று செய்தியாளர்களிடையே சந்தேகம் வலுத்துள்ளது.