மணிலா, மார்ச் 21 – பிலிப்பைன்ஸ் மக்களின் வருமானம் உயர்ந்துள்ளதால், அந்நாட்டில் வாகனங்களின் தேவை அதிகரித்துள்ளது.
இதனால், மோட்டார் வாகனத் தொழிற்துறைக்கு வழக்கத்தை விட 20 சதவிகிதம் அதிகமான விற்பனை கிடைத்துள்ளதாக வர்த்தகம் மற்றும் தொழிற்துறை (Department of Trade and Industry) அறிவித்துள்ளது.
இது குறித்து வர்த்தக சங்க செயலாளர் கிரிகோரி டாமிங்கோ கூறுகையில், பிலிப்பைன்ஸ் தொடர்ந்து பொருளாதார வளர்ச்சியில் முன்னேறுமானால், கார்களின் விற்பனை அதிகரிப்பது நீண்ட காலத்திற்கு தொடரும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “அடுத்த பத்து வருடங்களுக்கு உள்நாட்டு மோட்டார் உற்பத்தியாளர்கள் ஒவ்வொரு வருடமும் 20 சதவிகித அதிக விற்பனை கிடைக்கும். இதன் காரணமாக அந்நிய நாடுகளின் முதலீடுகள் பெருகும்” என்றும் கிரிகோரி குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வருடத்தில், கார் தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் இணைந்து 200,000 யுனிட் என்ற இலக்கோடு இறக்குமதி கார்களின் விற்பனையை தொடங்கினார்கள். ஆனால் நிர்ணயம் செய்யப்பட்ட இலக்கையும் தாண்டி 212,000 யுனிட் விற்பனை கிடைத்துள்ளது என்று கூறப்பட்டுள்ளது.