சென்னை, மார்ச் 22 – சிவகார்த்திக்கேயன், ஹன்சிகா நடித்துள்ள படம், மான் கராத்தே. விரைவில் வெளிவரவுள்ள இந்தப் படம் பற்றி நிருபர்களிடம் சிவகார்த்திக்கேயன் கூறியதாவது, ஹன்சிகாவுடன் நடிப்பதால் உடன் நடிக்கும் நாயகிகள் பற்றி நிறைய கேள்விகளை எதிர்கொள்கிறேன்.
எனக்கு கதையும், நடிப்பும்தான் முக்கியமே தவிர, உடன் நடிக்கும் நாயகிகள் யார் என்று பார்ப்பதில்லை. அடுத்து எனது ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார், காஜல் அகர்வால் நடிக்கிறார் என்ற செய்திகள் வருகிறது. அவர்களுடன் நடித்தால் சந்தோஷம்தான்.
ஆனால் நாயகிகள் விஷயத்தில் கதை விஷயத்தில் தலையிடும் அளவுக்கு நான் பெரிய நடிகன் இல்லை. எந்த நாயகிகளுடனும் நடிப்பேன். ஒரு படத்தில் நடித்தோம், சம்பளம் வாங்கினோம் என்று இல்லாமல் நான் நடித்த படத்தால் தயாரிப்பாளரில் இருந்து தியேட்டர் கேன்டீன் ஊழியர் வரை பயன் அடைகிறார்களா என்றும் கவனிக்கிறேன்.
அதே போல, ஒரு படத்தை முடித்துவிட்டுதான் அடுத்த படத்தில் நடிக்க வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். மனைவி, குழந்தைகள் என்று குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருப்பதால், நான் உண்டு, என் வேலை உண்டு என்று இருக்கிறேன் என சிவகார்த்திக்கேயன் கூறினார்.
பேட்டியின் போது தயாரிப்பாளர் எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன், இயக்குனர் கே.திருக்குமரன், இசை அமைப்பாளர் அனிருத், ஒளிப்பதிவாளர் சுகுமார் உடன் இருந்தனர்.